கலெக்டர் அலுவலகத்தில் விட்டு சென்ற ஆடுகளை விவசாயியிடம் ஒப்படைத்த போலீசார்
தேனி கலெக்டர் அலுவலகத்தில் விட்டு சென்ற ஆடுகளை விவசாயியிடம் போலீசார் ஒப்படைத்தனர
ராயப்பன்பட்டி அருகே உள்ள அணைப்பட்டியை சேர்ந்தவர் தென்னரசு. விவசாயி. இவர் தனது நிலப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத விரக்தியில், தனது 20 ஆட்டுக்குட்டிகளை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று விட்டு சென்றார். இரவு வரை அந்த ஆட்டுக்குட்டிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்று கொண்டு இருந்தன. அவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. ஆடுகளை அழைத்து செல்லுமாறு தென்னரசுவிடம் போலீசார் கூறியபோதும், அவர் ஆடுகளை அழைத்து செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இரவில் அந்த ஆட்டுக்குட்டிகளை ஒரு சரக்கு வேனில் ஏற்றி, தேனி மேற்கு சந்தை வளாகத்தில் நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் கட்டிடத்துக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள ஒரு அறையில் அவை அடைக்கப்பட்டன. இன்று மீண்டும் தென்னரசுவிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆடுகளை பெற்று கொள்ளாவிட்டால் முறைப்படி அவற்றை கோசாலையில் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, தென்னரசு தனது ஆடுகளை பெற்று கொள்ள தேனிக்கு வந்தார். அவரிடம் ஆடுகளை போலீசார் ஒப்படைத்தனர்.