தேனி மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு


தேனி மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 1 Jun 2023 2:30 AM IST (Updated: 1 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழுவினர் ஆய்வு செய்தனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழுவினர் ஆய்வு செய்தனர்.

உறுதிமொழி குழு

தமிழக சட்டமன்ற பேரவையில் 2023-24-ம் ஆண்டுக்கான அரசு உறுதிமொழி குழு கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி அமைக்கப்பட்டது. இந்த குழுவின் தலைவராக பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன் நியமிக்கப்பட்டார். உறுப்பினர்களாக 11 எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழுவினர் நேற்று தேனி மாவட்டத்துக்கு வந்தனர். தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசு வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திட்டப் பணிகள் ஆய்வு

அதன்படி, சின்னமனூரில் ஒருங்கிணைக்கப்பட்ட வாழை சிப்பம் கட்டும் நிலையம், குச்சனூர் சனீஸ்வரர் கோவில் புதுப்பித்தல் பணிகள், குச்சனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெரியகுளத்தில் உள்ள பழைய மாவட்ட முன்சீப் கோர்ட்டு கட்டிடங்களை மறுசீரமைப்பு செய்யும் பணிகள், தேவதானப்பட்டியில் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குடியிருப்புகள், போலீசாருக்கான குடியிருப்புகள், வைகை அணை, தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஓமியோபதி சிகிச்சை பிரிவு போன்றவை தொடர்பாக ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வை தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தேனி மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அளித்த உறுதிமொழிகள் குறித்தும், அவற்றை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு செய்யப்பட்டது.

11 ஆண்டுகளுக்கு பிறகு...

கூட்டத்தை தொடர்ந்து குழுவின் தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேனி மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு ஆய்வு 11 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடைபெற்றுள்ளது. முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கொடுக்கும் உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுகிறதா என்பதை இந்த குழு ஆய்வு செய்யும். அந்த வகையில் தேனி மாவட்டத்திற்கு 183 உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டன. அதில் 87 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 10 உறுதிமொழிகள் பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கையில் உள்ளன. மற்ற உறுதிமொழிகள் நிலுவையில் உள்ளன. தேவதானப்பட்டி போலீஸ் குடியிருப்பில் ஆய்வு செய்த போது அங்கு தெருவிளக்கு வசதி வேண்டும் என்றும், பூங்கா அமைத்துக்கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். பேரூராட்சிகள் துணை இயக்குனர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

பணி நீக்கம்

மேலும் வைகை அணையில் ஆய்வு செய்தபோது சுற்றுலா பயணிகளிடம் அங்கு பணியாற்றும் பணியாளர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்த குறைகள் தெரியவந்தது. வைகை அணை பூங்காவில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சீருடை வழங்க வேண்டும் என்றும், வருங்காலங்களில் சீருடை அணிந்துதான் பணியாற்ற வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. மது அருந்தியோ, சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் வகையிலோ நடந்து கொண்டால் உடனடியாக பணி நீக்கம் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், குழு உறுப்பினர்களான எ.எல்.ஏ.க்கள் அருள் (சேலம் மேற்கு), கருணாநிதி (பல்லாவரம்), சக்கரபாணி (வானூர்), ரூபி ஆர்.மனோகரன் (நாங்குநேரி), எம்.கே.மோகன் (சென்னை அண்ணாநகர்), ராமலிங்கம் (நாமக்கல்), ஜெயக்குமார் (பெருந்துறை), சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story