சட்டமன்ற மசோதா விவகாரம்: பா.ஜ.க. அல்லாத மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் கடிதம்
சட்டமன்ற மசோதா விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. அல்லாத மாநில முதல்-மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,
தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் பலவற்றிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தரவில்லை. இதனையடுத்து சட்டமன்ற மசோதாக்களுக்கு உரிய காலத்துக்குள் ஒப்புதல் வழங்க மாநில கவர்னர்களுக்கு மத்திய அரசும், ஜனாதிபதியும் தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் கடந்த 10-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு அன்றைய தினமே கவர்னர் ஒப்புதல் அளித்தார்.
முதல்-அமைச்சர் கடிதம்
இதற்கிடையே பா.ஜ.க. அல்லாத பிற மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கூட்டாட்சி தத்துவம்
இந்தியாவில் மக்களாட்சி இன்று முக்கியமான கட்டத்தில் உள்ளது. நமது நாட்டில் கூட்டாட்சி தத்துவம் என்பது படிப்படியாக மறைந்து வருகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கவர்னரின் கடமைகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமை, பொறுப்புகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள போதிலும், அவைகள் இப்போது மதிக்கப்படுவதோ அல்லது பின்பற்றப்படுவதோ இல்லை.
முடங்கி போயிருக்கிறது
இதனால் மாநில அரசுகளின் செயல்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் சில மாநில கவர்னர்கள் காலவரையறையின்றி நிலுவையில் வைத்திருப்பதால் அந்தந்த மாநில நிர்வாக செயல்பாடுகள் அந்த குறிப்பிட்ட இனங்களில் முடங்கிப்போயிருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்ட 'ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதா' உள்ளிட்ட பல்வேறு சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்கும் பொருட்டு கவர்னர் எழுப்பிய சந்தேகங்களை பலமுறை தெளிவுபடுத்தியும் அந்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதே நிலைதான், பல்வேறு மாநிலங்களிலும் உள்ளன.
ஆதரவு அளிக்க வேண்டும்
இந்த சூழ்நிலையில், அந்தந்த மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்யுமாறு ஒன்றிய அரசு மற்றும் ஜனாதிபதியை வலியுறுத்தி மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது ஏற்புடையதாக இருக்கும் என கருதி, அது சம்பந்தமாக 10-4-2023 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட தனித்தீர்மானத்தின் சாராம்சத்தையும் இந்த கடிதத்துடன் இணைத்து அனுப்பி உள்ளேன்.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதன் நோக்கம் மற்ற மாநிலங்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும் என நம்புகிறேன்.
மற்ற மாநில சட்டமன்றத்திலும் இதே போன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் சட்டமன்றங்களின் இறையாண்மை மற்றும் சுயமரியாதை நிலைநிறுத்தப்படும் என உறுதியாக நம்புகிறேன். எனவே, இதே தீர்மானத்தை தங்கள் மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆதரவு அளித்திட கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.