சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு
ஊட்டி டேவிஸ் பூங்காவில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஊட்டி
ஊட்டி டேவிஸ் பூங்காவில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பொதுக்கணக்கு குழு ஆய்வு
தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் குழுவின் உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ராமச்சந்திரன், ஈ.ஆர்.ஈஸ்வரன், கிருஷ்ண சாமி, டாக்டர்.சி.சரஸ்வதி, எஸ்.சேகர், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட டேவிஸ் பூங்காவில் ரூ.91 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர், நடைபாதை, மின் மற்றும் குடிநீர் வசதி, குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அமைக்கப்பட்ட டேன்ஹோடா விற்பனை நிலையத்தையும், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஊட்டி உழவர் சந்தையை பார்வையிட்டனர்.
காய்கறிகள் கொள்முதல்
அப்போது சந்தையில் விற்பனை செய்யும் விவசாயிகள் மற்றும் கடைகளின் எண்ணிக்கை, ஒரு நாளைக்கு பெறப்படும் காய்கறிகளின் அளவு மற்றும் அதற்கான செலவினம் குறித்து வேளாண் விற்பனையாளரிடம் கேட்டறிந்தனர். அப்போது 91 விவசாயிகள் தங்களது விளைப்பொருட்களை விற்பனை செய்வதாகவும், 82 கடைகள் மூலம் ஒரு நாளைக்கு ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 30 டன் காய்கறிகள் கொள்முதல் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் மற்றும் குழுவின் உறுப்பினர்கள் ஊட்டி தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தை பார்வையிட்டு, அலுவலர்களிடம் வருவாய்த்துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். பின்னர் தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு நடத்தினர். தொடர்ந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பார்சன்ஸ்வேலி பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில குடிநீர் அபிவிருந்தி திட்டத்தின் கீழ் ஊட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் வழங்க நிறைவேற்றப்பட்ட பணியை சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
மின்உற்பத்தி நிலையம்
தொடர்ந்து சிங்காரா மின் உற்பத்தி நிலையம், முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சென்று பார்வையிட்டனர்.
ஆய்வின் போது கலெக்டர் அம்ரித், மாவட்ட வன அலுவலர் கவுதம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, சட்டமன்ற பொது கணக்கு குழு இணைச்செயலாளர் தேன்மொழி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செல்வகுமார், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் கருப்புசாமி, துணை இயக்குனர் ஷபிலா மேரி, ஊட்டி நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், ஊட்டி ஆர்.டி.ஓ. துரைசாமி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் அனிதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.