தொழில்நுட்ப கோளாறு:லியோ படம் திடீர் நிறுத்தம்; ரசிகர்கள் ரகளைதிட்டக்குடியில் பரபரப்பு
திட்டக்குடியில் உள்ள ஒரு தியேட்டரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக லியோ படம் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.
திட்டக்குடி,
சிறப்பு காட்சி
தமிழகம் முழுவதும் பெரும்பாலான தியேட்டர்களில் நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் சிறப்பு காட்சி நேற்று வெளியிடப்பட்டது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள ஒரு தியேட்டரில் சிறப்பு காட்சி காலை 9.10 மணிக்கு திரையிடப்பட்டது. ஏராளமான ரசிகர்கள் படத்தை கண்டு களித்துக் கொண்டிருந்தனர்.
படம் தொடங்கி 30 நிமிடம் கடந்த நிலையில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு படத்தில் ஒலி கேட்கவில்லை.
தொடர்ந்து 10 நிமிடம் வரை சத்தம் இன்றி படம் ஓடிக் கொண்டிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் படத்தை ஒலி அமைப்புடன் ஓட்டக்கோரி ரகளையில் ஈடுபட்டதுடன், தியேட்டரை விட்டு வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக கூச்சலிட்டனர்.
பரபரப்பு
இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி போலீசார் மற்றும் தியேட்டர் ஊழியர்கள் ஆகியோர் விரைந்து வந்து ரசிகர்களை சமாதானம் செய்ததுடன், படத்தை நிறுத்தி தொழில் நுட்ப கோளாறை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து தொழில் நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு காலை 10.45 மணிக்கு முதலில் இருந்து லியோ திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இந்த சம்பவத்தால் தியேட்டர் வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.