'லியோ' காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை - உள்துறை செயலாளர்


லியோ காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை - உள்துறை செயலாளர்
x
தினத்தந்தி 18 Oct 2023 5:24 AM GMT (Updated: 18 Oct 2023 6:14 AM GMT)

'லியோ' படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என உள்துறை செயலாளர் அமுதா கூறியுள்ளார்.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை (வியாழக்கிழமை) வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை நாளை முதல் 24-ந்தேதி வரை காலை 9 மணி முதல் 1.30 மணி வரை 5 காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்துள்ளது.

ஆனால், முதல் நாள் ரசிகர்கள் காட்சியாக அதிகாலை 4 மணிக்கு திரைப்படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும். மறுநாள் முதல் 24-ந்தேதி வரை காலை 7 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் படத்தை தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 'லியோ' படத்தை அதிகாலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க முடியாது என்றும், காலை 7 மணிக்கு திரையிட அனுமதி கேட்கும் கோரிக்கையை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்தநிலையில், லியோ படத்துக்கு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை. அரசாணையின்படி நாளை முதல் 25-ம் தேதி வரை லியோ படத்துக்கு காலை 9 மணி காட்சிகளுக்கே அனுமதி என உள்துறை செயலாளர் அமுதா கூறியுள்ளார்.


Next Story