இருக்கூர் பகுதியில் 16 நாட்களாக அட்டகாசம்:5 கால்நடைகள், 2 நாய்களை கடித்து கொன்ற சிறுத்தைப்புலிவிவசாயிகள், பொதுமக்கள் அச்சம்
பரமத்திவேலூர்:
இருக்கூர் பகுதியில் கடந்த 16 நாட்களாக அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலி இதுவரை 5 கால்நடைகள் மற்றும் 2 நாய்களை கடித்து கொன்றது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கன்றுக்குட்டியை இழுத்து சென்றது
பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஒன்றியம் இருக்கூர் அருகே உள்ள செஞ்சுடையாம்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில்ராஜா. கடந்த மாதம் 31-ந் தேதி இவரது மாட்டு தொழுவத்தில் கட்டியிருந்த கன்றுக்குட்டியை சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மர்ம விலங்கு ஒன்று இழுத்து சென்று ரத்தத்தை மட்டும் உறிஞ்சி குடித்து விட்டு, கன்று குட்டியின் உடலை அப்பகுயில் உள்ள ஒரு மரவள்ளிக்கிழங்கு தோட்டத்தில் போட்டு விட்டு சென்றது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி செஞ்சுடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் தியாகராஜன் என்பவரது வீட்டில் வளர்ப்பு நாயை மர்ம விலங்கு கடித்து இழுத்து சென்றது. இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மர்ம விலங்கை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி இருக்கூரில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். வனத்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மர்ம விலங்கை பிடிக்க உரிய நடவடிக்கை உடனே மேற்கொள்ளப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலைமறியல் கைவிடப்பட்டது
சிறுத்தைப்புலி உறுதி செய்யப்பட்டது
மர்ம விலங்கு அட்டகாசம் குறித்து கடந்த 3-ந் தேதி மாலை செஞ்சுடையாம்பாளையத்தில் வளர்ப்பு நாயை கொன்று கரும்பு தோட்டத்தில் போடப்பட்டு இருந்த இடத்தையும், அதை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டு மற்றும் கண்காணிப்பு கேமரா ஆகியவற்றையும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மர்ம விலங்கு சிறுத்தைப்புலி என்பதை அவர் உறுதி செய்தார்.
சிறுத்தைப்புலியை பிடிக்க கூண்டுகள் வைத்தும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும் டிரோன் கேமரா மூலமும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே 5-ந் தேதி இரவு சுண்டப்பனை, சூரியாம்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரது வீட்டிற்கு வெளியே கட்டப்பட்டிருந்த ஆட்டை இழுத்து சென்று சிறிது தூரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் கடித்து தின்று சென்றது தெரியவந்தது.
இதேபோல் 7-ந் தேதி இரவு செஞ்சுடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் என்பவரது வீட்டிற்கு வெளியே கட்டப்பட்டிருந்த ஆட்டுக்குட்டியை சிறுத்தைப்புலி 300 மீட்டர் தூரம் இழுத்து சென்று கொன்று சாப்பிட்டது தெரியவந்தது. 9-ந் தேதி இரவு புளியம்பட்டி, ரங்கநாதபுரம், தோட்டக்காடு பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரது வீட்டிற்கு வெளியே கட்டப்பட்டிருந்த கன்றுக்குட்டியை காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்று கொன்று சாப்பிட்டது.
அமைச்சர் ஆய்வு கூட்டம்
இதற்கிடையே சிறுத்தைப்புலியை பிடிப்பது தொடர்பாக 10-ந் தேதி வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினர்.
அதன் பிறகு 3 கூண்டுகளும், 12 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு சிறுத்தைப்புலி நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் தொழில்நுட்பம் தெரிந்த விலங்குகளை கண்காணிக்கும் 3 மலைவாழ் கண்காணிப்பாளர்கள், உயர் அடுக்கு படையை சேர்ந்த 4 பேர், கோவை, வைகை அணை பகுதியில் இருந்து நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் வந்துள்ள வனத்துறையினர், சிறுத்தைப்புலியை பிடிப்பதற்கு பல்வேறு ஆலோசனை வழங்க ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் தொடர்ந்து சிறுத்தைப்புலியை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் 12-ந் தேதி இரவு புளியம்பட்டி, ரங்கநாதபுரம், பிள்ளையார் கோவில் அருகே உள்ள சண்முகம் என்பவரது வீட்டில் இருந்த ஆட்டுக்குட்டியை சிறுத்தைப்புலி தூக்கி சென்று சுமார் 2 கி.மீட்டர் தூரத்தில் போட்டு சென்றது.
கபிலர்மலை வட்டாரத்திற்குட்பட்ட இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், சுண்டப்பனை, புளியம்பட்டி, வெள்ளாளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நாய்கள், ஆட்டுக்குட்டிகள், கன்று குட்டிகள் உள்ளிட்டவைகளை வேட்டையாடி வரும் சிறுத்தைப்புலியை உடனடியாக பிடிக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருக்கூர் பகுதியில் கடந்த 31-ந் தேதி வேட்டையை தொடங்கிய சிறுத்தைப்புலி இதுவரை 2 கன்றுக்குட்டிகள், 3 ஆட்டுக்குட்டிகள் மற்றும் 2 நாய்களை கடித்து கொன்றுள்ளது. எனவே மனிதர்களை தாக்குவதற்கு முன்பு சிறுத்தைப்புலியை பிடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மோப்ப நாய் பென்சி வந்தது
பரமத்திவேலூர் தாலுகா இருக்கூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியை கண்டுபிடிக்க தேனியில் இருந்து பென்சி என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. சிறுத்தைப்புலியை பிடிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வல்லுனர்களும், முதுமலை பகுதியில் இருந்து டிராக்கர்ஸ் எனப்படும் புலிகளின் நடவடிக்கைகளை நன்கு அறிந்த மலைவாழ் பழங்குடி இனத்தை சேர்ந்த வல்லுனர்களும் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். விரைவில் சிறுத்தைப்புலியை பிடிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
சிறுத்தைப்புலி கல்குவாரியில் பதுங்கலா?
சிறுத்தைப்புலி முதன் முதலில் செஞ்சுடையாம்பாளையத்தில் கன்றுக்குட்டியை கடித்து கொன்றது. இப்பகுதி அடர்ந்த காடு நிறைந்த பகுதியாகும். இங்கு 5 கல்குவாரிகள் ஒரே பகுதியில் இயங்கி வந்தன. தற்போது இந்த குவாரிகள் இயங்கவில்லை. எனவே இந்த குவாரிகளுக்குள் சிறுத்தைப்புலி பதுங்கி இருக்கலாம் என வனத்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே குவாரியை சுற்றிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் சிறுத்தைப்புலி பிடிபடும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்தனர். இருப்பினும் வனத்துறையினர் 12 இடங்களில் கேமரா வைத்து கண்காணித்தும் இதுவரை எந்த கேமராவிலும் சிறுத்தைப்புலி உருவம் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








