இருக்கூர் பகுதியில் நடமாடும்சிறுத்தைப்புலி கல்குவாரியில் பதுங்கல்?


இருக்கூர் பகுதியில் நடமாடும்சிறுத்தைப்புலி கல்குவாரியில் பதுங்கல்?
x

இருக்கூர் பகுதியில் நடமாடும் சிறுத்தைப்புலி கல்குவாாியில் பதுங்கி உள்ளன என வனத்துறையிளர் தெரிவித்தனா்.

நாமக்கல்

பரமத்திவேலூர்

சிறுத்தைப்புலி

பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், சுண்டப்பனை, வெள்ளாளபாளையம், ரங்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஆடுகள், கன்றுக்குட்டிகள், நாய்கள் மற்றும் மயில்கள் உள்ளிட்டவைகளை கடந்த 15 நாட்களுக்கு மேலாக வேட்டையாடி வந்த சிறுத்தைப்புலி கடந்த 4 நாட்களாக இப்பகுதியில் எந்த கால்நடைகளையும் வேட்டையாடவில்லை. கடந்த 15 நாட்களாக கால்நடைகள் மற்றும் நாய்களை சிறுத்தைப்புலி இரவு நேரங்களில் வேட்டையாடி வந்ததால் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தைப்புலியின் கால் தடங்களை வைத்து கால்நடைகள் தாக்கப்பட்ட கிராமங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.

இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமலும், விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கும் உள்ளாகியுள்ளனர். சிறுத்தைப்புலியை பிடிக்கவும் அதன் இருப்பிடத்தை கண்டறியவும் பழங்குடி இனத்தை சேர்ந்த வனக்காப்பாளர்கள் மீன்காலன், பொம்மன் ஆகியோர் வரவழைக்கப்பட்டு வனத்துறையினருடன் இணைந்து சிறுத்தைப்புலியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கல்குவாரியில் சிறுத்தைப்புலி

இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:- செஞ்சுடையாம்பாளையம் பகுதியில் பயன்படுத்தப்படாமல் உள்ள கல் குவாரி பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது அங்கு சிறுத்தைப்புலி வந்து சென்றதற்கான கால்தடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து இரவில் சுமார் 30 கிலோமீட்டர் தூரம் வரை வெளியே சென்று வேட்டையாடிவிட்டு மீண்டும் அதன் இருப்பிடத்திற்கு திரும்பி வருவதும் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் மாவட்ட வனச்சரகர் பிரவீன்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தைப்புலி வந்து செல்லும் இடம் கண்டறியப்பட்ட பகுதியில் 18 கண்காணிப்பு கேமராக்களையும், 2 கூண்டுகள் வைத்து சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய டிரோன் கேமராக்கள் மூலமும் சிறுத்தைப்புலியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மனிதர்கள் வாசம் தென்பட்டால் மீண்டும் திரும்ப அந்த இடத்திற்கு சிறுத்தைப்புலி வராது என்பதால் அப்பகுதியில் வனத்துறையினர் பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை.

ஆனால் கடந்த 4 நாட்களாக இப்பகுதியில் சிறுத்தைப்புலி எந்த கால்நடைகளையும் பிடிக்க வில்லை என்பதால் இடம் மாறி வேறு பகுதிக்கு சென்று விட்டதா அல்லது கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டதால் குவாரி பகுதியிலேயே தங்கி வெளியே வராமல் இருக்கும் என வனத்துறையினர் சதேகப்படுகின்றனர். இருப்பினும் விரைவில் சிறுத்தைப்புலியை கண்டுபிடிக்க உரிய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story