பந்தலூரில் சிறுத்தை நடமாட்டம்:கேமரா பொருத்தி கண்காணிப்பு


பந்தலூரில் சிறுத்தை நடமாட்டம்:கேமரா பொருத்தி கண்காணிப்பு
x
தினத்தந்தி 20 Aug 2023 6:45 PM GMT (Updated: 20 Aug 2023 6:46 PM GMT)

பந்தலூரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

நீலகிரி

பந்தலூர்: பந்தலூர் இன்கோ நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அங்கு தெருவிளக்குகள் இல்லாமல் இரவு நேரங்களில் இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நிற்பது தெரியாமல், பொதுமக்கள் வனவிலங்குகளிடம் சிக்கிக்கொள்கின்றனர். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு அந்த பகுதிக்குள் சிறுத்தை புகுந்தது. பின்னர் குடியிருப்புக்குள் அங்கும், இங்கும் நடமாடியது. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். எனவே, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர். இதையடுத்து கூடலூர் வன கோட்ட அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்புசாமி ஆகியோர் உத்தரவின் படி, தேவாலா வனச்சரகர் சஞ்சீவி, வனவர் பாலகிருஷ்ணன், வனக்காப்பாளர் பரமேஸ்வரன் மற்றும் வனத்துறையினர் இன்கோ நகருக்கு சென்று, சிறுத்தை நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் தெரிவித்தனர். பின்னர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க அப்பகுதியில் ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story