கோத்தகிரி அருகே சாலையில் உலா வந்த சிறுத்தை-பொதுமக்கள் அச்சம்
கோத்தகிரி அருகே அதிகாலை நேரத்தில் சாலையில் சிறுத்தை ஒன்று உலா வந்ததால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே அதிகாலை நேரத்தில் சாலையில் சிறுத்தை ஒன்று உலா வந்ததால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
சிறுத்தை உலா
கோத்தகிரி அருகே அரவேனு சாலையில் உள்ள பெரியார் நகர் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதி வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியாக உள்ளதால் இங்குள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலையில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறுத்தை ஒன்று குடியிருப்பை ஒட்டியுள்ள சாலை வழியாக நடந்து சென்றது. பின்னர் அந்த சிறுத்தை அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்து மறைந்தது. இந்த காட்சிகள் அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
அச்சத்தில் பொதுமக்கள்
இது குறித்து தகவல் வெளியே பரவியதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும் கரடிகள் மற்றும் சிறுத்தைகள் அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்திற்குள் முகாமிட்டுள்ளதால், தேயிலைப் பறிக்கச் செல்லும் தொழிலாளர்களும் பணிக்குச் செல்ல தயக்கம் காண்பித்து வருகின்றனர். ஏற்கனவே இதே பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 2 சிறுத்தைகள் மற்றும் 2 கருஞ்சிறுத்தைகள் உலா வந்தது குறிப்படத்தக்கது. இதே போல இங்குள்ள வீட்டில் இருந்த வளர்ப்பு நாயை சிறுத்தை கடித்து கொண்டுச் சென்றது. எனவே வன விலங்குகள் பொதுமக்களை தாக்கி அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படும் முன் வனத்துறையினர் வனவிலங்குகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.