தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சியில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தொழுநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பாலச்சந்தர், விழுப்புரம் மருத்துவ பணிகள் (தொழுநோய்) துணை இயக்குனர் மாதுளா, மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த பேரணி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு கச்சிராயப்பாளையம் சாலை, காந்திரோடு, சேலம் மெயின்ரோடு, கடைவீதி வழியாக மந்தவெளிக்கு சென்று முடிவடைந்தது.
இதில் தனியார் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு தொழு நோயை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.
முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் மகாத்மா காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 30-ந்தேதி தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் புதிய நோயாளிகளை கண்டறியும் முகாம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த முகாம் வருகிற 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது என்றார். தொடர்ந்து தொழுநோயால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கவுரவித்தார்.
இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் பழமலை, பொற்ச்செல்வி, தேசிய சுகாதார குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் பாலதண்டாயுதபாணி, நலக் கல்வியாளர் அன்புநிலவன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர்கள் சுந்தர்பாபு, ஜெயசீலன், கொளஞ்சியப்பன், விஜயராகவன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள் தமிழ்வாணன், பழனிவேல் மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.