புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீட்டெடுப்போம்


புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீட்டெடுப்போம்
x

புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீட்ெடடுப்போம் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை:

பா.ஜ.க. பொதுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வம் அழகப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுக்கோட்டை என்றால் நாட்டுப்பற்று மிகுந்த ஊர். இங்கிருந்து தான் சத்தியமூர்த்தி, டாக்டர் முத்துலெட்சுமி போன்றவர்கள் வந்துள்ளனர். புதுக்கோட்டை தமிழ்நாட்டில் இருந்து புறக்கணிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திற்கு தனி கவனம் செலுத்தி முன்னேற அனைத்து நடவடிக்கையும் நாங்கள் மேற்கொள்வோம். இந்த சுதந்திர தினத்தில் 40 லட்சம் தேசிய கொடியை நாம் கொடுத்துள்ளோம்.

தி.மு.க. ஆட்சியில் சாதி, மத பேதம் எல்லா இடத்திலும் உள்ளது. சட்டம்-ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளது. நரிக்குறவ பெண்ணான அஷ்வினிக்கு வீடுகட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த செக் செல்லாமல் போய்விட்டது. நரிக்குறவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படும்.

வாக்குறுதியை நிறைவேற்றவில்லை

திராவிட மாடல் ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட மக்களை பிற்படுத்தப்பட்ட மக்களாகவே வைத்துள்ளது. பா.ஜ.க. பொறுப்பான கட்சி. அடக்கு முறைக்கு பயப்படும் கட்சி பா.ஜ.க. அல்ல. தி.மு.க. தேர்தலின் போது 508 வாக்குறுதி அளித்தது. ஆனால் மகளிர் உதவித்தொகை, கல்வி கடன் ரத்து, நகை கடன் ரத்து, டீசலுக்கு ரூ.3 குறைப்பு, கியாசுக்கு ரூ.100 மானியம் போன்ற எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் மத்திய அரசின் முயற்சியால் 18 நாளில் மீட்கப்பட்டனர். தமிழகத்தின் கஜானா காலியாகி வருகிறது. கனிமவளத்தின் மூலம் வரும் வருவாய் ரூ.125 கோடி அளவில் குறைந்துள்ளது.

நாடாளுமன்ற தொகுதியை மீட்ெடடுப்போம்

போதையை ஒழிப்போம் என்று முதல்-அமைச்சர் கடந்த 13-ந் தேதி அறிவித்தார். ஆனால் 14-ந் தேதி டாஸ்மாக் ஒருநாள் வருமானம் ரூ.250 கோடியாகும். தி.மு.க. டிராமா ஆட்சி நடத்துகிறது. தமிழகத்திற்கு ரூ.6 லட்சத்து 14 ஆயிரம் கோடி கடன் உள்ளது. தமிழக அமைச்சர்கள், டெல்லியில் நடக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ள அச்சப்படுகின்றனர். தி.மு.க., பா.ஜ.க.வை பார்த்து ஏன் பயப்படுகிறது?. நான் படித்ததற்கு காரணம் தி.மு.க. என்று தி.மு.க.வினர் சொல்கிறார்கள். தவறு. நான் அரசியலுக்கு வருவதற்கு காரணம் தி.மு.க. தான். 2024-ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீட்டெடுப்போம். இந்தியா முழுவதும் மாற்றம் ஆரம்பமாகிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் பள்ளத்திவிடுதியை சேர்ந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.ஜ.க.சரவணன், நலத்திட்ட மாவட்ட தலைவர் அபிமன்யு முருகேசன், நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் ஆர்.என்.மதி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story