காவி சாயத்தை அழித்து விட்டு சமூக நீதி வண்ணம் பூசுவோம் - குட்டி ஸ்டோரி சொன்ன அமைச்சர் உதயநிதி


காவி சாயத்தை அழித்து விட்டு சமூக நீதி வண்ணம் பூசுவோம் - குட்டி ஸ்டோரி சொன்ன அமைச்சர் உதயநிதி
x

இன்று நடைபெற்ற மாநாட்டில் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு தலைவருக்கான உரையாற்றினார்.

சேலம்,

திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு தலைவருக்கான உரையாற்றினார். அப்போது அவர் 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என தொடர்ந்து திமுக வெற்றி பெற்றதற்கான காரணத்தை ஒரு கதை மூலம் கூறினார். அவர் கூறியது வருமாறு:-

ஒரு ஊரில் ஓட்டப்பந்தயத்தில் சிறந்த சிறுவன் ஒருவன் இருந்தான். ஊரில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் சிறப்பாக ஓடி வெற்றி பெற்ற அவனை அனைவரும் கைதட்டி பாராட்டினர். ஆனால் வயதானவர் ஒருவர் மட்டும் கைதட்டவில்லை. இதை பார்த்த சிறுவன் தன்னை விட வயதில் மூத்தவர்களுடன் ஓடி வெற்றி பெற்றான். அப்போதும் அந்த பெரியவர் மட்டும் கைதட்டவில்லை.

ஊரே என்னை பாராட்டும்போது நீங்கள் மட்டும் ஏன் பாராட்டவில்லை என்று அந்த வயதானவரிடம் சிறுவன் கேட்டான். அதற்கு பதிலளித்த பெரியவர், நான் அழைத்து வரும் இரண்டு சிறுவர்களுடன் ஓடி வெற்றி பெற்று காட்டு என்று கூறி அந்த கிராமத்தைச் சேர்ந்த சத்தான உணவு இல்லாமல் வாடுகின்ற ஏழை சிறுவன் மற்றும் கண்ணொளி இல்லாத மாற்றுத்திறனாளி சிறுவன் இருவரை அழைத்து வந்தார்.

அவர்களுடனும் ஓடி அந்த சிறுவனே வெற்றி பெற்றான். மற்ற சிறுவர்கள் இருவரும் அவனுக்கு பின்னால் தடுமாறி வந்தனர். இந்த முறை அவனுக்கு யாருமே கைதட்டவில்லை. ஒன்றும் புரியாத சிறுவன், ஒவ்வொரு முறை நான் வெற்றி பெற்ற போதும் கைதட்டிய மக்கள் இந்த முறை ஏன் கை தட்டவில்லை என்று கேட்டான். அதற்கு அந்த பெரியவர் நீ அந்த சிறுவர்களுடன் மீண்டும் போட்டி போடு. ஆனால் இந்த முறை அவர்கள் இருவரையும் கைபிடித்துக்கொண்டு சேர்ந்து ஓடு என்று கூறினார்.

சிறுவனும் அதே போல் ஓடினான். அவர்கள் மூவரும் ஒன்றாக வந்தனர். இந்த முறை மொத்த ஊரும் அந்த சிறுவனை பாராட்டியது. இப்படித்தான் திமுகவின் வெற்றியும். உரிமை மறுக்கப்பட்டிருப்பவர்கள், பெரும்பான்மையால் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சிறுபான்மை மக்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் என எல்லாரோடும் சேர்ந்து ஓடி கொண்டிருக்கிறோம். திமுகவின் தேர்தல் வெற்றியை ஒவ்வொருவரும் தங்களது வெற்றியாக கொண்டாடுகின்றனர்.

இதே போன்ற வெற்றியை திமுக இடம்பெற்றுள்ள 'இந்தியா' கூட்டணி வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பெறும். இந்தியா முழுவதும் காவிச் சாயத்தை அழித்து, சமூக நீதி வண்ணம் பூசுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story