மூவர்ண கொடியை போற்றுவோம், மூட அரசியல்தனத்தை அடக்குவோம்: தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் கடிதம்


மூவர்ண கொடியை போற்றுவோம், மூட அரசியல்தனத்தை அடக்குவோம்: தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் கடிதம்
x

மூவர்ண கொடியை போற்றுவோம், மூட அரசியல் தனத்தை அடக்குவோம் என்று தொண்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

76-வது சுதந்திர தின விழா, உணர்வில் கலந்த கொண்டாட்டமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், நாட்டு கொடியை உயர்த்துகிறேன். மாநில முதல்-அமைச்சர்கள் அந்தந்த மாநிலத்தில் கொடி ஏற்றும் உரிமையைப் பெற்று தந்தவர் கருணாநிதி.

அவருக்கு நெஞ்சத்தில் நன்றி செலுத்தி, மூவர்ண கொடியை ஏற்றி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களும் மேலும் வலிமைபெற உறுதியேற்பதுதான் விடுதலைப் பவள விழாவான இந்த 75-ம் ஆண்டு நிறைவின் கொண்டாட்டங்களின் நோக்கமாக உள்ளது.

இந்தியாவின் பன்முகத்தன்மையையும், ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என நினைப்பவர்கள், தாங்கள் தான் தேசபக்திக்கு ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, வரம்புமீறுவது வாடிக்கையாகி வருகிறது.

இரங்கல்

இந்திய ராணுவத்தில் பணியாற்றி, ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொண்டு வீர மரணம் அடைந்த தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த வீரர் லட்சுமணன் மறைவுக்கு, முதல்-அமைச்சர் என்ற முறையில் என்னுடைய இரங்கலை தெரிவித்ததுடன், ராணுவ வீரரின் உடலுக்குச் செலுத்தப்பட வேண்டிய அரசின் மரபார்ந்த மரியாதையைச் செலுத்திடுமாறு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை பணித்திருந்தேன்.

அமைச்சர் அந்த வீரமகனை இழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன், மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மலர் வளையம் வைத்து, வீரவணக்கம் செலுத்தினார்.

செருப்பு வீச்சு

அரசின் மரபார்ந்த நடவடிக்கைகள் நடைபெறும் இடத்தில், மலிவான அரசியல் விளம்பரம் தேடுவதற்காக தமிழ்நாடு பா.ஜ.க.வின் தலைவரும், அவரது கட்சி நிர்வாகிகளும் குவிந்திருந்ததுடன், அதுகுறித்து அமைச்சரும், அதிகாரிகளும் கேள்வி எழுப்பியதற்காக, அடாவடியான செயல்களில் ஈடுபட்டு, தங்களின் தரம் என்ன என்பதையும், தங்களின் தேசபக்தி என்பது எத்தனை போலியானது என்பதையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தேசிய கொடி பொருத்தப்பட்ட அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி, விடுதலைநாளின் பவள விழா மகத்துவத்தையே மலினப்படுத்தி இருக்கிறார்கள்.

வீரமரணம் எய்திய ராணுவ வீரருக்கு உண்மையாகவே அஞ்சலி செலுத்த நினைத்திருந்தால் அவரது வீடு தேடிச் சென்று, குடும்பத்தினரைச் சந்தித்து, வீரரின் உடல் சுமந்த பெட்டி அங்கே வந்ததும் இறுதி வணக்கம் செலுத்தியிருக்க வேண்டும்.

விடுதலையின் 75-வது ஆண்டினை வெறும் அரசியலுக்காக பயன்படுத்தும் இவர்களோ, ஊர் ஊருக்கு விளம்பரம் தேடும் பயணத்தில் ஈடுபட்டு வருவதால், போகிற வழியில் ராணுவ வீரருக்கும் மரியாதை செலுத்துவது போல அரசியல் லாபம் தேடலாம் என்ற கணக்குடன், சட்டவிதிகளுக்கு புறம்பாக செயல்பட்டு சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயன்று தேசிய கொடியை அவமதித்துள்ளனர்.

கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது

இந்த இழிசெயல்களில் ஈடுபட்டவர்களுடன் இணைந்திருந்த ஒருவரே, அமைச்சரை நேரில் சந்தித்து, தனது செயலுக்கு மன்னிப்பு கோரியிருப்பதுடன், "இனி இவர்களின் சங்காத்தமே வேண்டாம்" என தலைமுழுகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த வன்முறை நிகழ்வின் உண்மையைத்தெரிவித்து, மிகுந்த கண்ணியத்துடன் தனது கருத்துகளைத் வெளிப்படுத்தியிருப்பதுடன், தனது காரில் வீசப்பட்ட ஒற்றைச் செருப்பை அதற்குரிய 'சிந்த்ரெல்லா' வாங்கிச் செல்லலாம் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, தனக்கு எதிராக செயல்பட்டவர்களின் தராதரத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

மதவெறி அரசியலின் மலிவான விளம்பரத்திற்கு பதிலடி என்ற வகையில் நாமும் அதற்கு இடம் அளித்துவிடக்கூடாது என்ற தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்த அறிக்கையை ஏற்று, தொண்டர்கள் அமைதி காத்து வருகிறார்கள்.

மதுரை விமான நிலைய பகுதியில் அமைச்சரின் கார் மீது செருப்பு வீசியும், விடுதலையின் 75-ம் ஆண்டு பவளவிழாவில் தேசிய கொடியை அவமதித்தும் கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கடுமையான விளைவுகள்

அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும். இதற்கு தூண்டுகோலாக இருக்கும் சக்திகள், தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படியான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன். இது தமிழ்நாடு! இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது.

தி.மு.க. ஒரு ஜனநாயக இயக்கம். அறவழியில்தான் அது பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வென்றிருக்கிறது. ஆறாவது முறையாக ஆட்சிப்பொறுப்பில் உள்ள நிலையில், அந்த பொறுப்பினை உணர்ந்து, தமிழ்நாட்டின் அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் ஆட்சியும் தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

சட்டப்படி அடக்குவோம்

இதை சாதகமாக நினைத்துக்கொண்டு, சமூக விரோதிகளைக் கொண்ட அரசியல் வீணர்கள் செயல்படுவார்களேயானால் அவர்களைச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவிட மாட்டோம் என்கிற உறுதிமொழியையும் உத்தரவாதத்தையும் வழங்குகிறேன்.

இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவர்ண கொடியையும், விடுதலைக்காக பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story