ஆரம்பிக்கலாங்களா..! ஆடியோ சீரிஸ் மூலம் மக்களுடன் பேசப்போவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஆடியோ சீரிஸ் மூலம் மக்களுடன் பேசப்போவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களாக 'உங்களில் ஒருவன்' என்ற தலைப்பில் கேள்வி பதிலாக பல்வேறு விஷயங்களை வீடியோ வடிவில் பகிர்ந்து வந்தார். இந்த நிலையில் ஆடியோ சீரிஸ் (Podcast) மூலம் மக்களுடன் பேசப்போவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த ஆடியோ சீரிஸ்-க்கு 'ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா' (Speaking for india) என்று தலைப்பு வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "இந்தியாவுக்காக பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம். 2024-ல் முடியப்போகிற பாஜக ஆட்சி, இந்தியாவை எப்படி எல்லாம் உருக்குலைத்திருக்கிறார்கள்; எதிர்காலத்தில் நாம் கட்டமைக்க விரும்புகிற சமத்துவ, சகோதரத்துவ இந்தியா எப்படி இருக்கும் என்று ஒரு ஆடியோ சீரிஸ் மூலம் பேசப் போகிறேன்.
அதற்கு 'ஸ்பீக்கிங் ஃபார் இந்தியா' என்ற தலைப்பை வைத்துக் கொள்ளலாமா..? தெற்கிலிருந்து வரும் இந்த குரலுக்காக காத்திருங்கள்..!" என்று கூறியுள்ளார்.