மத்திய அரசின் அநீதியான போக்கைத் தடுக்க ஆங்கிலப் புத்தாண்டில் சபதம் ஏற்போம் - வைகோ

மத்திய அரசின் அநீதியான போக்கைத் தடுக்க ஆங்கிலப் புத்தாண்டில் சபதம் ஏற்போம் என்று வைகோ கூறியுள்ளார்.
சென்னை,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமூக நீதியும், சகோதரத்துவமும் ஓங்கி ஒளிரவேண்டிய காலகட்டத்தில் ஜனநாயகத்தின் அடித்தளத்தையே தகர்த்திட மத்திய அரசும், இந்துத்துவா சக்திகளும், சனாதன கூட்டமும் மத்திய அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன. இவற்றை எதிர்த்துப் போராடும் அரசியல் கட்சிகளும், பொதுநலனில் அக்கறை உடையோரும், மாநில சுயாட்சியைக் காக்கவும், மத்திய அரசின் அநீதியான போக்கைத் தடுக்கவும் ஆங்கிலப் புத்தாண்டு மலர்கிற இந்த நாளில் சபதம் ஏற்றுக்கொள்வோம்.
இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில் திராவிட மாடல் ஆட்சியை அறிஞர் அண்ணா காட்டிய வழியில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகுந்த கவனத்துடன் நடத்தி வருகிறார். இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 'இந்தியா டுடே' இதழ் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. மற்ற மாநிலங்களும் தமிழகத்தைப் பின்பற்றத்தக்க விதத்தில் இன்றைய திமுக அரசுக்கு நாம் துணையாக ஆதரவு அளிப்போம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.