நடப்போம், நலம் பெறுவோம்: அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. நடைபயிற்சி பாதை -அமைச்சர் அறிவிப்பு
நடப்போம், நலம் பெறுவோம் என்ற நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ. நடைபயிற்சி பாதை அமைக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பான மானிய கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் நேற்று விவாதித்தனர்.
அவர்களுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் தனது துறைக்கான புதிய 106 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
கட்டண படுக்கைகள்
* சென்னை எழும்பூர்-மண்டல கண் மருத்துவவியல் நிலையத்திற்கு நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
* நெல்லை, தஞ்சை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தர்மபுரி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 7 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் பொள்ளாச்சி, கடலூர், ஈரோடு, காஞ்சீபுரம், பெரம்பலூர், கும்பகோணம், தென்காசி மற்றும் கோவில்பட்டி ஆகிய 8 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் நவீன வசதிகளுடன் சிகிச்சை பெற கட்டண படுக்கைகள் அமைக்கப்படும்.
4,133 காலிப்பணியிடங்களுக்கு
* சென்னை, கோவை மற்றும் மதுரை ஆகிய 3 மாவட்ட உணவு பகுப்பாய்வு ஆய்வகங்களில் நுண்ணுயிரியல் பிரிவு மேம்படுத்தப்படும்.
* தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த 4,133 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவர்.
இருதய பாதுகாப்பு மருந்துகள்
* மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க இருதய பாதுகாப்பு மருந்துகள் வழங்கப்படும்.
* 29 அரசு ஆஸ்பத்திரிகளுக்கு புதிய கட்டிடங்கள் ரூ.161.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.
* சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனைக்கு ரூ.146.52 கோடி மதிப்பீட்டில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.
* சென்னை அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புதிய மாணவிகள் விடுதி கட்டப்படும்.
* சென்னை எழும்பூர், அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டிடம் ரூ.53 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
புதிய கட்டிடங்கள்
* 200 புதிய நகர்ப்புற துணை சுகாதார நிலையங்கள் கட்டப்படும்.
* ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு 100 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு நிறுவப்படும்.
* மகத்தான மருத்துவ கட்டமைப்பு 4 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் நிறுவப்படும்.
* அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்தும் வகையில் கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் உள்ள 2,286 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரூ.10.17 கோடி மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படும்.
* காசநோய் பரிசோதனைக்கான நுகர்வு பொருள்கள் வழங்கப்பட்டும் அனைத்து வட்டார அளவிலும் ஒருங்கிணைந்த காச நோய் சேவைகள் வழங்கப்படும்.
சுகாதார நடைபயிற்சி
* சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவி எலும்பு அறுவை திறன் ஆய்வகம் நிறுவப்படும்.
* எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தைகள் எலும்பு மஜ்சை மாற்று சிகிச்சை பிரிவிற்கு தேவையான அதிநவீன உபகரணங்கள் வழங்கப்படும்.
* சென்னை கிண்டி கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு ஆய்வகங்ளுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் தர சான்றிதழ் பெறுவதற்காக நவீன ஆய்வக உபகரணங்கள் மற்றும் ஆய்வக கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.
* அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தூய்மை பணியாளர்களின் பயன்பாட்டிற்கென தனி அறை அமைத்து தரப்படும்.
* 'நடப்போம் நலம் பெறுவோம்' என்ற நோக்கத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் நடைபாதைகள், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து 8 கி.மீ தூரம் கொண்ட நடைபாதை உருவாக்கப்படும். சுகாதார பணியாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அங்கு சுகாதார நடைபயிற்சியில் பங்கேற்பார்கள். நடைபயிற்சியின் முடிவில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.