வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றேடுத்தே தீருவோம் - தொண்டர்களுக்கு, ராமதாஸ் கடிதம்


வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை வென்றேடுத்தே தீருவோம் - தொண்டர்களுக்கு, ராமதாஸ் கடிதம்
x

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எப்பாடுபட்டாவது வெகுவிரைவில் வென்றேடுத்தே தீருவோம் என்று தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டு, சமுதாய படிநிலையின் அடித்தட்டில் தள்ளப்பட்ட பாட்டாளி மக்கள், தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைக் கேட்டு போராடியதற்காக காவல்துறையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதன் 35-வது நினைவு நாள்.

காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகளை துணிச்சலுடன் மார்பில் தாங்கிய இட ஒதுக்கீட்டுப் போராட்ட போராளிகள் 21 பேருக்கும் நான் எனது வீரவணக்கங்களை செலுத்துகிறேன்.

2021-ம் ஆண்டு வன்னியர்களுக்கு 10.50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. அந்த வகையில் கடந்த ஆண்டு நமது சமூகநீதி பயணத்தில் வெற்றி ஆண்டாக அமைந்தது. அதனால், கடந்த ஆண்டு இட ஒதுக்கீட்டுபோராளிகளின் நினைவு நாளில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து மரியாதை செலுத்தினோம்.

காலம்காலமாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டு வந்த சமுதாயம், போராடி, உயிர்த்தியாகம் செய்து சமூகநீதியை வென்றெடுத்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் கிட்டத்தட்ட 50 அமைப்புகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. கோர்ட்டு வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்று தீர்ப்பளித்தது.

அப்போது நான் உங்களுக்கு அளித்த வாக்குறுதி' 'எப்பாடு பட்டாலும் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை மீண்டும் வென்றெடுத்துக் கொடுக்காமல் ஓயமாட்டேன்'' என்பது தான். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகத் தான் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக ஓயாமல் போராடிக் கொண்டிருக்கிறேன்.

நமது தரப்பில் உள்ள நியாயத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டு, வன்னியர்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதை தமிழக சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் வாக்குறுதியாக அளித்திருக்கிறார். நமக்கும் நம்பிக்கை உள்ளது. போராளிகள் சிந்திய ரத்தம் ஒருபோதும் வீண்போகாது.

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எப்பாடுபட்டாவது வெகுவிரைவில் வென்றேடுத்தே தீருவோம். இந்த உணர்வுடன் நமது சமூகநீதி நாளான இன்று நமது இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும். அனைவரும் அவர்களின் வீட்டு முன்பு இட ஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்ற பதாகையை அமைத்து வீர வணக்கம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story