அரசு பள்ளி ஆசிரியர் என்று பொய்சொல்லிபட்டதாரி பெண்ணை திருமணம் செய்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை;கோபி கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

அரசு ஆசிரியர் என்று பொய்சொல்லி பட்டதாரி பெண்ணை திருமணம் செய்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோபி கோா்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்து உள்ளது.
கடத்தூர்
அரசு ஆசிரியர் என்று பொய்சொல்லி பட்டதாரி பெண்ணை திருமணம் செய்த வாலிபருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோபி கோா்ட்டு அதிரடி தீர்ப்பு அளித்து உள்ளது.
திருமணம்
சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய மகன் செந்தில்குமார் (வயது 35). இதேபோல் திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா தச்சன்குறிச்சியை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவருடைய மகள் சாந்தஷீலா (33). இவர் முதுகலை பட்டத்துடன் எம்.எட். படிப்பும் முடித்து உள்ளார்.
செந்தில்குமாருக்கும், சாந்தஷீலாவுக்கும் கடந்த 25.5.2014 அன்று திருச்சி அருகே உள்ள சமயபுரத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது, ஈரோடு மாவட்டம் கோபி அருகே நடுகாவிரிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் தான் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாக செந்தில்குமார் கூறி உள்ளார். இதை உண்மை என நம்பி சாந்தஷீலாவை அவருடைய பெற்றோர், செந்தில்குமாருக்கு திருமணம் செய்து கொடுத்து உள்ளனர்.
தனிக்குடித்தனம்
திருமணமாகி 8 மாதங்களுக்கு பிறகு 2015-ம் ஆண்டு கணவன், மனைவி ஆகியோர் கோபிக்கு தனிக்குடித்தனம் வந்து உள்ளனர். கோபி வந்த பின்னர்தான் கணவர் நிரந்தர ஆசிரியராக பணிபுரியவில்லை என்பதும், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக தற்காலிகமாக ஆசிரியராக பணிபுரிந்து வருவதும் சாந்தஷீலாவுக்கு தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுபற்றி கணவர் செந்தில்குமாரிடம் விசாரித்து உள்ளார். அப்போது அவர் தான் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருவதாக ஒப்புக்கொண்டார். தான் மோசடியாக ஏமாற்றப்பட்டோம் என்பதை சாந்தஷீலா உணர்ந்தார்.
சிறை தண்டனை
இதைத்தொடர்ந்து கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாந்தஷீலா புகார் அளித்தார். அந்த புகாரில், 'தன்னை ஏமாற்றி மோசடியாக திருமணம் செய்து கொண்ட செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு கோபி முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை மாஜிஸ்திரேட்டு விஜய் அழகி விசாரித்து நேற்று தீர்ப்பு கூறினார். அதில், 'அரசு பள்ளி ஆசிரியர் எனக்கூறி ஏமாற்றி சாந்தஷீலாவை திருமணம் செய்த செந்தில்குமாருக்கு 3 ஆண்டு சிறை தண்டணையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், விதித்து தீர்ப்பு கூறினார்.