பஞ்சமி நிலங்களை மீட்க விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்


பஞ்சமி நிலங்களை மீட்க விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்
x

பஞ்சமி நிலங்களை மீட்க விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மணிவிழா, அரியலூர் மாவட்ட மாநாடு குறித்த ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நகர செயலாளர் செல்வம் வரவேற்று பேசினார். ஒன்றிய செயலாளர் பொன் தங்கராசு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செல்வநம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். மாநில பொறுப்பாளர் அன்பானந்தம், மாவட்ட பொறுப்பாளர் இலக்கியதாசன், மருதவாணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில், கட்சி தலைவர் திருமாவளவனின் 60-ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, அரியலூரில் நடைபெறும் மணி விழா மாநாட்டை பொற்காசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக நடத்த வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் ஆங்கிலேயர் அரசால் வழங்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை மீட்டு நில உரிமையாளரிடம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தா.பழூர் ஒன்றியத்தில் மயான வசதி, சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். சோழமாதேவி கிராமத்தில் காலனி தெருவில் குடியிருப்பு பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் அசோகன், சக்கரவர்த்தி, பாக்கியராஜ், வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.


Next Story