விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை; 8 பேர் கைது


தினத்தந்தி 1 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-02T06:30:52+05:30)

குடவாசல் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை வெட்டிக்கொன்ற 8 பேரை போலீசார் கைது செய்தனர். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள அம்மையப்பன் அக்கரை நடுத்தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவருடைய மகன் கவியரசன்(வயது 22). விடுதலை சிறுத்தைகள் கட்சி கிளைச்செயலாளராக இருந்து வந்த இவர், திருவாரூரில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருக்கண்ணமங்கையில் ஒரு துக்க நிகழ்ச்சிக்கு கவியரசன் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

வெட்டிக்கொலை

அப்போது அவரது மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த ஒரு கார், கவியரசன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்தது. பின்னர் காரில் இருந்து 7 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் கீழே இறங்கினர்.

இதை பார்த்த கவியரசன் ஏதோ விபரீதம் நடக்கப்போவதை உணர்ந்து அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் அந்த கும்பல் கவியரசனை ஓட, ஓட விரட்டிச்சென்று அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்து விட்டு தாங்கள் வந்த காரில் ஏறி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த குடவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலை செய்யப்பட்ட கவியரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

இதுகுறித்த புகாரின் பேரில் குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் கவியரசனை கொலை செய்த கொலையாளிகள் முத்துப்பேட்டை அருகே உள்ள பின்னத்தூரில் ஒரு தென்னந்தோப்பில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

8 பேர் கைது

இதனைத்தொடர்ந்து முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு மறைந்திருந்த அம்மையப்பனை சேர்ந்த பெரியதம்பி(30), காளிதாஸ்(25), வசந்தகுமார்(22), சந்தோஷ்(20). சாமிநாதன்(26) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அம்மையப்பனை சேர்ந்த ஆறுமுகம் மகன் சிவகாளிதாஸ், அரசவனங்காட்டை சேர்ந்த ஆறுமுகம் மகன் கணேசன், அம்மையப்பன் தியாகராஜன் மகன் சந்தோஷ் ஆகிய 3 பேரும் குடவாசல் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து சரண் அடைந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். ேபாலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக கவியரசன் ்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

உறவினர்கள் சாலை மறியல்

இதற்கிடையே கவியரசனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்மையப்பன் கடைத்தெருவில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மையப்பனில் இரு தரப்பினர் இடையே நடந்த தகராறு காரணமாகவே இந்த படுகொலை நடந்துள்ளது. இதுகுறித்து கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

அந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தாத கொரடாச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தையொட்டி அம்மையப்பனில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. அம்மையப்பனில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story