ஏரியூர் பகுதியில் பூட்டியே கிடக்கும் கிராமப்புற நூலகங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?


ஏரியூர் பகுதியில்  பூட்டியே கிடக்கும் கிராமப்புற நூலகங்கள்  பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?
x
தினத்தந்தி 30 Sep 2022 6:45 PM GMT (Updated: 30 Sep 2022 6:46 PM GMT)

ஏரியூர் பகுதியில் பூட்டியே கிடக்கும் கிராமப்புற நூலகங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா?

தர்மபுரி

ஏரியூர்:

ஏரியூர் பகுதியில் பூட்டியே கிடக்கும் கிராமப்புற நூலகங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர மாணவ, மாணவிகள், இளைஞர்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்.

கிராமப்புற நூலகங்கள்

மக்களின் அறிவு வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பவை புத்தகங்கள். மக்களுக்கு அறிவு வெளிச்சத்தை வழங்கும் பல்வேறு வகையான புத்தகங்கள் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு அரசின் சார்பில் நூலகங்கள் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன. கிராமப்புற இளைஞர்கள், மாணவ- மாணவிகள் பொதுமக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் நூலகங்கள் அமைக்கப்பட்டு செயல்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக கிராமப்புற பகுதிகள் அதிகம் கொண்ட தர்மபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகளில் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நூலகத்திற்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஏரியூர் ஒன்றியத்திற்குட்பட்ட 10 ஊராட்சிகளிலும் கிராமப்புற நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நூலகங்களை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். ஓய்வு நேரங்களில் நூலகத்திற்கு சென்று அங்கு இருக்கும் புத்தகங்களை அவர்கள் ஆர்வத்துடன் படித்து வந்தனர்.

மூடி கிடக்கும் நூலகங்கள்

இந்த நிலையில் சமீபகாலமாக ஏரியூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலான கிராமப்புற நூலகங்கள் முறையாக திறக்கப்பட்டு செயல்படுவது இல்லை. இவற்றில் சில நூலகங்கள் தொடர்ந்து மூடியே உள்ளதால் உரிய பராமரிப்பின்றி காணப்படுகின்றன. இந்த நூலகங்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்கள் பயன்பாடு இன்றி கரையான் பிடித்து சேதம் அடையும் சூழல் உள்ளது.

மஞ்சார அள்ளி ஊராட்சியில் செல்லமுடியில் உள்ள நூலகம் தொடர்ந்து மூடியே இருப்பதால் பொதுமக்கள் வருகையின்றி காணப்படுகிறது. ராம கொண்ட அள்ளி ஊராட்சியில் புதுசோளப்பாடியில் அமைந்துள்ள நூலகம், அஜ்ஜன அள்ளி ஊராட்சி சிகரல அள்ளியில் உள்ள நூலகம் ஆகியவை பயன்பாடு இன்றி சேதம் அடைய தொடங்கி உள்ளன. இந்த நூலகங்களை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நூலகங்களுக்கு வழங்கப்படும் புத்தகங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று ஏரியூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இதுதொடர்பாக அந்த பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திவாகர் விஜயன்: ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 10 ஊராட்சிகளில் மொத்தம் 150-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள், மாணவ, மாணவிகள் கிராமப்புற நூலகங்களை பயன்படுத்தி வந்தனர். தன்னார்வலர்கள், பகுதி நேர ஊழியர்கள் இந்த நூலகங்களை செயல்படுத்தி வந்தனர். சமீபகாலமாக பெரும்பாலான நூலகங்கள் முறையாக செயல்படவில்லை. சில நூலகங்கள் பூட்டியே கிடக்கிறது. இதனால் நூலகங்களை பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கிராமப்புற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் முறையான பராமரிப்பு இன்றி உள்ள நூலகங்களை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

ஆய்வு நடத்த வேண்டும்

விஜயகுமார்:- ஏரியூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் செயல்பட்டு வந்த கிராமப்புற நூலகங்கள் ஏழை, எளிய மாணவர்கள், இளைஞர்கள் தங்களுக்கு தேவையான புத்தகங்களை படிக்கவும், நாளிதழ்கள் படித்து உலக நடப்புகளை தெரிந்து கொள்ளவும், பொது அறிவை வளர்த்து கொள்ளவும் பயன்பட்டு வந்தன. இவற்றில் சில நூலகங்கள் தற்போது முறையான பராமரிப்பின்றி காணப்படுகின்றன. நூலகங்கள் தொடர்ந்து மூடியே கிடப்பதால் அங்கே வைக்கப்பட்டு இருக்கும் புத்தகங்களும் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் மூடி வைக்கப்பட்டுள்ள நூலகங்களை கண்டறிந்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கிராமப்புற நூலகங்களில் பணியாளர்களை முழுமையாக நியமனம் செய்ய வேண்டும். அவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்திரா:- ஏரியூர் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் செயல்பட்ட நூலகங்களில் கணிசமானவை அண்மைக்காலமாக முறையான செயல்பாடு இன்றி காணப்படுகின்றன. நூலகங்கள் செயல்பட்டு வந்த கட்டிடங்கள் உரிய பராமரிப்பு இன்றி காட்சியளிக்கிறது. மாவட்டம் மற்றும் தாலுகா அளவிலும், கிராமப்புற அளவிலும் புத்தக வாசிப்பு பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்படும் இந்த சூழலில் கிராமங்களில் உள்ள நூலகங்களை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நூலகங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான புத்தகங்களை சேதமடையாமல் பாதுகாக்க வேண்டும். ஏரியூர் பகுதியில் மட்டுமின்றி தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கிராமப்புற நூலகங்கள் சரியாக செயல்படுகின்றனவா? என்பதை உரிய ஆய்வின் மூலம் கண்டறிந்து அவற்றின் செயல்பாட்டை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட துறையினர் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


Next Story