மதுரை புதுமண்டபத்தில் முதல் நூலகம் குறித்த கல்வெட்டு


மதுரை புதுமண்டபத்தில் முதல் நூலகம் குறித்த கல்வெட்டு
x

புதுமண்டபத்தில் மதுரையில் முதல் நூலகம் குறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

மதுரை


புதுமண்டபத்தில் மதுரையில் முதல் நூலகம் குறித்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

வரலாற்று சிறப்பு

தமிழகத்தின் தொன்மையான நகரங்களில் மதுரை முக்கியமான வரலாற்று சிறப்பு மிக்க நகரமாகும். இதன் பெருமை பறைசாற்றும் வகையில், ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்ட பொது நூலகம் குறித்த கல்வெட்டு கிடைத்து உள்ளது. இது குறித்து மதுரை எம்.பி.வெங்கடேசன் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தென்தமிழகதத்தின் முதல் அருங்காட்சியகம் மற்றும் முதல் புத்தக கடைகள் உருவான இடம் மதுரையாகும். இங்கு கி.பி.1800 ஆண்டின் பிற்பகுதியில் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சி குறித்து காவல்கோட்டம் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பழங்காலத்தில் ஓலைகளில் தயாரான சுவடிகள் புத்தகங் களாக மாறி அந்த புத்தகங்கள் விற்பனைக்காக புத்தக கடைகள் உருவாயின.

புதுமண்டபம்

அப்படிப்பட்ட கடைகள் முதன் முதலில் மதுரை புதுமண்டபத்தில் உருவாக்கப்பட்டது. ராமநாதபுரத்தில் இருந்து மதுரை வந்து தங்கி இருந்த பாண்டித்துரைத்தேவர் கம்பராமாயணத்தையும், திருக்குறளையும் படிப்பதற்காக கேட்டு உள்ளார். ஆனால், அவருக்கு அவை கிடைக்கவில்லை. முடிவில், புதுமண்டபத்தில் உள்ள புத்தக கடைகளில் இருந்து அந்த புத்தகங்களை வாங்கி உள்ளார். திருக்குறளும், கம்பராமாயணமும் சங்கம் வளர்த்த மதுரையில் கிடைப்பதே அரிதாகிவிட்டதே என்ற கவலையில் தான் 4-ம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் தொடங்கினார் என பதிவு செய்யப் பட்டு உள்ளது.

கல்வெட்டு

இந்த சம்பவத்துக்கு பின்னரே புத்தகங்கள் என்றால் புதுமண்டபத்தில் மட்டும் தான் கிடைக்கும் என்ற நிலை உருவாகி உள்ளது. அதனை தொடர்ந்து, 1942-ம் ஆண்டு புதுமண்டபத்தின் மையப் பகுதியில், அருங் காட்சியகத்துடன் அமைந்த நூலகம் ஒன்று சென்னை மாகாண கவர்னரால் திறந்து வைக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் இதுவாகத்தான் இருக்க முடியும். இதன் திறப்பு விழாவை குறிக்கும் கல்வெட்டு மண்டபத்தின் மையப்பகுதியில் இருந்தது.

ஆனால், காலப்போக்கில் இந்த கல்வெட்டு காணாமல் போனது. எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வுக்காக புது மண்டபம் சென்ற போது, அந்த கல்வெட்டு குறித்து, மீனாட்சி அம்மன் கோவிலின் இணை கமிஷனரிடம் வலியுறுத்தப் பட்டது. சமீபத்தில் இணை கமிஷனர் செல்லத்துரை கடைகள் நிறைய இருப்பதால், கல்வெட்டை கண்டு பிடிப்பதில் சிரமம் இருப்பதாக தெரிவித்தார்.

தற்போது, கடைகள் முழுவதும் குன்னத்தூர் சத்திரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. சுமார் 100 வருடங்களுக்கு பின்னர் புது மண்டபம், பழைய மண்டமாக முழு அழகுடன் காட்சி அளிக்கிறது. வசந்த விழாவை இந்த வருடம் புது மண்டபத்தில் கொண்டாட, சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

சான்று

அப்போது, திறப்பு விழா கல்வெட்டு கிடைத்துள்ளது. உடனடியாக இணை கமிஷனர் தகவல் தந்ததையடுத்து, நேரில் வந்து பார்வையிட்டேன்.

இதில், நூலகம் திறக்கப்பட்ட வருடம், திறந்து வைத்த அதிகாரிகள் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரை புத்தகங்களின் அடையாளத்தையும், நூலகத்தின் அடையாளத்தையும் எளிதில் தொலைத்து விடாது என்பதற்கு இதுவே சான்றாகும். இதனை மீட்டுக்கொடுத்த அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.


Next Story