கொட்டும் மழையில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முகவர்கள் சங்கம்
எல்.ஐ.சி. முகவர்கள் சங்கத்தின் கூட்டு குழு சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் இளையப்பன் தலைமை தாங்கினார். தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு துணைத்தலைவர் தர்மலிங்கம், இணை செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் எல்.ஐ.சி. நிறுவனத்தை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். முகவர்களுக்கு போனஸ் உயர்த்தி வழங்க வேண்டும். அனைத்து விதமான விண்ணப்பங்களுக்கும், ஒப்புகை ரசீது மற்றும் முகவர்களுக்கு பணிக்கொடை ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கவேண்டும்.
கட்டாய ஆன்லைன் பதிவு
அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் வழங்க வேண்டும். எல்.ஐ.சி.முகவர்களுக்கு வழங்கி வரும் சலுகைகள் பறிக்கப்படும் நடைமுறையை கைவிட வேண்டும். முகவர்களுக்கான கமிஷன் தொகை குறைக்க கூடாது. பழைய பாலிசிகளுக்கு கட்டாய ஆன்லைன் பதிவு என்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, மத்திய அரசு தலையிட்டு 13½ லட்சம் முகவர்களையும், 37 கோடி பாலிசிதாரர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். ஆர்ப்பாட்டத்தில் சேலம் கோட்ட பொதுச்செயலாளர் அமுதன், முன்னாள் பொதுச்செயலாளர் உமாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொட்டும் மழையில்...
சேலத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் எல்.ஐ.சி. முகவர்கள் குடைகளுடன் கோட்டை மைதானத்தில் திரண்டனர். அவர்கள் அங்கு அமைக்கப்பட்டு இருந்த நாற்காலிகளின் குடைகளை பிடித்துக் கொண்டு அமர்ந்தனர்.
இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளைவலியுறுத்தி கோஷங்கள்எழுப்பினர்.