கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து-வேளாண்மை அதிகாரி எச்சரிக்கை
கிருஷ்ணகிரி:
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேளாண்மை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
உரம் இருப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவ பயிர் சாகுபடிக்கு தேவையான யூரியா 3 ஆயிரத்து 46 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 2 ஆயிரத்து 233 மெட்ரிக் டன், பொட்டாஷ் 589 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 5 ஆயிரத்து 958 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 104 மெட்ரிக் டன் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உர விற்பனையாளர்கள் உர மூட்டைகளில் அச்சிடப்பட்டுள்ள விலைக்கு அதிகமாக உரங்களை விற்பனை செய்யக்கூடாது. விவசாயிகளுக்கு ஆதார் அட்டையுடன், சாகுபடி பரப்பிற்கு தேவைப்படும் அளவில் உரங்களை வினியோகம் செய்ய வேண்டும். விற்பனையாளர்கள் இருப்பு பதிவேடுகளை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.
உரிமம் ரத்து
உரம் வாங்கும் விவவாயிகளிடம் உரிய கையொப்பம் பெறுவதோடு, ரசீது வழங்கி பட்டியல்கள் பராமரிக்கப்பட வேண்டும். உரங்களை அங்கீரிகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். மேலும், உரங்களுடன் பிற பொருட்களை சேர்த்து கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு விற்பனை செய்ய கூடாது. பிற மாநில மற்றும் பிற மாவட்ட விவசாயிகளுக்கு எந்த காரணத்தை கொண்டும் உரங்கள் வழங்கக்கூடாது.
அண்டை மாவட்டங்களில் இருந்து உரங்களை வாங்க கூடாது. அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையை விட அதிக விலைக்கு உரம் விற்றாலோ, உரிய ஆவணமின்றி உர விற்பனையில் ஈடுபட்டாலோ, விற்பனை செய்த உரங்களுக்கு உரிய ரசீது வழங்கவில்லை என்றாலோ, விற்பனை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.