ஓட்டல் தொழிலாளிக்கு விதித்த ஆயுள் தண்டனை உறுதி


ஓட்டல் தொழிலாளிக்கு விதித்த ஆயுள் தண்டனை உறுதி
x

ஓட்டல் தொழிலாளிக்கு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஓட்டலில் காசாளராக ராஜாமணி என்பவர் பணியாற்றினார். அவருடன் ரவி என்ற நாகராஜன் உள்ளிட்ட சிலரும் அங்கேயே தங்கி பணியாற்றினர். கடந்த 2012-ம் ஆண்டு காசாளர் என்ற முறையில் ராஜாமணியிடம் ரவி பணம் கேட்டுள்ளார். இதுபற்றி முதலாளியிடம் கேட்டு முடிவு செய்வதாக கூறிய அவர், பணம் தர தாமதித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரவி கடந்த 17.1.2012 அன்று அதிகாலை 4 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த ராஜாமணியின் கழுத்தில் கயிற்றை இறுக்கி அவரை கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு ரவி தப்பிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ரவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தண்டனையை எதிர்த்து ரவி, மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். அப்போது மேல்முறையீட்டாளருக்காக இலவச சட்ட உதவி மையம் சார்பில் ஆஜரான வக்கீல் ஜெயா இந்திரா படேல், மனுதாரர் கொலைக்குற்றத்தில் ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. வெளிநபர்கள் ஓட்டலில் புகுந்து கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று வாதாடினார்.

விசாரணை முடிவில், வெளிநபர்கள் ஓட்டலில் புகுந்து ராஜாமணியை கொலை செய்ததற்கான ஆதாரங்கள் இல்லை. மனுதாரர் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே அவருக்கு விதித்த தண்டனை உறுதி செய்யப்படுகிறது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story