காவலாளியை சுட்டுக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை
திருவேங்கடம் அருகே கூட்டுறவு சங்கத்தில் காவலாளியை சுட்டுக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
திருவேங்கடம் அருகே கூட்டுறவு சங்கத்தில் காவலாளியை சுட்டுக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சுட்டுக்கொலை
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள நடுவப்பட்டியில் கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த ராமராஜ் (வயது 47) என்பவர் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந்தேதி இரவு கூட்டுறவு சங்கத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆலங்குளம் கரிசல்பட்டியை சேர்ந்த ஜானகிராமன் என்ற சிவா (48), சுரண்டை ஆலடிப்பட்டியை சேர்ந்த நரேந்திர சிங் என்ற ராஜேஷ் (37) மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சோனு என்ற குன்வர்லாச்சன் சிங் யாதவ் ஆகிய 3 பேரும் அங்கு கொள்ளையடிக்க வந்தனர்.
இதைக்கண்ட ராமராஜ் உஷார் அடைந்து கொள்ளையை தடுக்க முயற்சி செய்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் ராமராஜை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
ஆயுள் தண்டனை
இதுதொடர்பாக திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை 3-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி பன்னீர்செல்வம் வழக்கை விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட நரேந்திரசிங் மற்றும் சோனு ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதில் நரேந்திர சிங்குக்கு ரூ.6 ஆயிரம் அபராதமும், சோனுவுக்கு ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஜானகிராமன் தொடர்ந்து ஆஜராகாமல் தலைமுறைவாக இருந்து வருகிறார். இதையொட்டி அவர் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு வக்கீல் சூர சங்கரவேல் ஆஜரானார்.