முன்விரோதத்தில் துப்புரவு தொழிலாளி கொலை:அண்ணன், தம்பிகள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனைசேலம் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு


முன்விரோதத்தில் துப்புரவு தொழிலாளி கொலை:அண்ணன், தம்பிகள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனைசேலம் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு
x

முன்விரோதத்தில் துப்புரவு தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன், தம்பிகள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது

சேலம்

சேலம்

முன்விரோதத்தில் துப்புரவு தொழிலாளியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன், தம்பிகள் உள்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டது

முன்விரோதம்

சேலம் கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் சூரியமூர்த்தி. இவருடைய மகன்கள் டெனிபா (வயது 35), சிலம்பரசன் (31), திருநாவுக்கரசு (30), ஜீசஸ் (27). குட்டியப்பன் (25). கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10-ந்தேதி கிச்சிப்பாளையம் பகுதியில் குட்டியப்பன் நின்று கொண்டிருந்தார். அங்கு கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ஜான், சாரதி ஆகியோர் வந்தனர்.

அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. மேலும் ஏற்கனவே இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் சேர்ந்து குட்டியப்பன் முதுகில் கத்தியால் குத்தினர். பலத்த காயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தம்பி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அவருடைய அண்ணன்களுக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து விசாரித்தனர்.

சரமாரியாக குத்தினர்

அப்போது தம்பியை கத்தியால் குத்த காரணம் அதே பகுதியில் வசிக்கும் துப்புரவு தொழிலாளி விஜயகுமாரின் மகன் சூர்யா என்பது அவர்களுக்கு தெரிந்தது. இதையடுத்து சூர்யாவை தாக்கும் நோக்கில் டெனிபா, சிலம்பரசன், திருநாவுக்கரசு, ஜீசஸ் மற்றும் இவர்களது உறவினர்கள் விக்னேஷ் (24), மார்ட்டின் (35), ஜெயக்குமார் (25), சிவா (24) ஆகிய 8 பேர் சூர்யா வீட்டிற்கு சென்றனர்.

அப்போது வீட்டில் சூர்யா இல்லை. இதையடுத்து அவர்கள் சூர்யாவின் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சூர்யாவின் தந்தை விஜயகுமார் நடந்து வருவதை பார்த்த அவர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் விஜயகுமாரை வயிறு உள்ளிட்ட உடலில் பல இடங்களில் கத்தியால் சரமாரியாக குத்தினர்.

பரிதாபமாக இறந்தார்

இதில் குடல் சரிந்து விஜயகுமார் மயங்கி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். தாக்குதலை தடுக்க வந்த விஜயகுமாரின் உறவினர்கள் மேரி, கோவிந்தராஜ், கணேசன், ஜான் உள்ளிட்ட 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த அனைவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியமூர்த்தி மகன்கள் 4 பேர் உள்பட 8 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் எண்-3-ல் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

ஆயுள் தண்டனை

இதில் துப்புரவு தொழிலாளி விஜயகுமாரை கத்தியால் குத்தி கொலை செய்த டெனிபா, சிலம்பரசன், திருநாவுக்கரசு, ஜீசஸ், விக்னேஷ், மார்ட்டின், ஜெயக்குமார், சிவா ஆகிய 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், அனைவருக்கும் தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராமஜெயம் பரபரப்பு தீர்ப்பு அளித்தார். இதில் அரசு தரப்பில் வக்கீல் மணிகண்டன் ஆஜரானார்.

வாய்த்தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாக துப்புரவு தொழிலாளி கொலை வழக்கில் அண்ணன், தம்பிகள் 4 பேர் உள்பட 8 பேருக்கு சேலம் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story