சிறுமிக்கு பாலியல் தொல்லை- தந்தை-தாத்தாவுக்கு ஆயுள் தண்டனை


சிறுமிக்கு பாலியல் தொல்லை-  தந்தை-தாத்தாவுக்கு ஆயுள் தண்டனை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை-தாத்தாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 42 வயதான கூலித்தொழிலாளிக்கு 17 வயது, 15 வயது என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் சிறுவயதாக இருந்தபோதே தாய் இறந்து விட்டார். இதனால் அக்காள்-தங்கை இருவரையும் அவரது பாட்டியும், சித்தியும் அழைத்து சென்று வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு தனது மாமியார் வீட்டிற்கு சென்ற கூலித்தொழிலாளி எனது 2 மகள்களையும் நானே வளர்த்து கொள்கிறேன் எனக்கூறி அவர்கள் இருவரையும் தன்னுடன் அழைத்து சென்று வளர்த்து வந்தார். மூத்த மகளுக்கு 15 வயதான நிலையில் பெற்ற தந்தையான கூலித்தொழிலாளியே அவளை பாலியல் பலாத்காரம் செய்தார்.

எல்லை மீறிய தாத்தா

இதனால் அதிர்ச்சி அடைந்த அவள் தனது தங்கையிடம் கூறி கதறி அழுதார். தனது சகோதரியின் நிலையை கண்டு கண்கலங்கிய தங்கை தனது வீட்டிற்கு அருகில் வசித்து வரும் தாத்தா முறையிலான உறவினரின் வீட்டிற்கு சென்று அக்காளுக்கு நடந்த விவரத்தை கூறினார். உடனே அந்த தாத்தாவும், அவரது மனைவியும் கூலித்தொழிலாளியை கண்டித்ததுடன் அக்காள்-தங்கை இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்து வந்தனர். அங்கு திண்ணையில் தங்கியிருந்தனர்.

அந்த நேரத்தில் சிறுமிகளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய 67 வயதான தாத்தாவும், மூத்த சகோதரியை பாலியல் பலாத்காரம் செய்தார். இப்படி பாலியல் பலாத்காரம் செய்ததால் அவள் பூப்பெய்து விட்டாள். இதனால் மாதவிடாய் காலத்தில் தாத்தா வீட்டில் தங்காமல் தனது தந்தை வீட்டிற்கு மூத்தமகள் வந்து தங்க தொடங்கினார். மாதவிடாய் காலம் முடிந்தபிறகு கூலித்தொழிலாளி மூத்தமகளை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ய தொடங்கினார்.

கருவை கலைக்க முயற்சி

இதனால் மூத்த மகள் கர்ப்பம் அடைந்தார். அவளின் கருவை கலைக்க மாத்திரைகள் எல்லாம் வாங்கி கொடுத்தும், கரு கலையாமல் வளர தொடங்கியது. 7 மாத கர்ப்பம் ஆன பிறகு வயிறு பெரியதாகி விட்டதால் இந்த பிரச்சினை வெளியே தெரிந்தது. உடனே அந்த சிறுமியின் சித்தி வந்து அவளை அழைத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதனை செய்தபோது கர்ப்பம் உறுதியானது.

தந்தை-தாத்தா கைது

இது குறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, ஏட்டு மகாலட்சுமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அந்த சிறுமியின் தந்தையையும், தாத்தா முறையிலான உறவினரையும் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

பின்னர் அவர்கள் இருவரையும் தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி சுந்தரராஜன் விசாரணை செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை, தாத்தாவுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.

இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே சிறுமியின் கருவை கலைக்க அனுமதி அளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதி விசாரித்து கருவை கலைக்க அனுமதி அளித்தார்.

கர்ப்பத்திற்கு தந்தையே காரணம்

அதைத்தொடர்ந்து அறுவை சிகிச்சையின் மூலம் கரு கலைக்கப்பட்டது. அவற்றை டி.என்.ஏ. பரிசோதனை செய்தபோது சிறுமி கர்ப்பம் ஆக அவளது தந்தையே காரணம் என்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேனில் அழைத்து செல்லப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.






Next Story