சொத்து பிரச்சினையில் விவசாயியை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை
ஆரணி அருகே சொத்து பிரச்சினையில் விவசாயியை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஆரணி
ஆரணி அருகே சொத்து பிரச்சினையில் விவசாயியை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஆரணி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
உயில் சாசனம்
ஆரணியை அடுத்த சேவூர் ஊராட்சிக்குட்பட்ட சாணாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 70), விவசாயி. இவருக்கு காளியம்மாள் என்ற மனைவியும் வெங்கடேசன் என்ற மகன் மற்றும் 4 மகள்கள் உள்ளனர்.
காளியம்மாளின் தாய் பவுனம்மாள் பேரன் வெங்கடேசனுக்கு 5 ஏக்கர் நிலமும், ஓட்டு வீடும் உயில் சாசனம் செய்து எழுதி வைத்துள்ளார்.
சிலகாலம் கழித்து காளியம்மாள் மரணம் அடைந்த நிலையில் பெருமாளிடம் வெங்கடேசன் மீது உள்ள சொத்தினை பிரித்து தருமாறு மகள்கள் கேட்டுள்ளனர்.
அதற்கு என் மீது தான் உயில் சாசனம் எழுதிக் கொடுத்துள்ளார். அதை யாருக்கும் தர முடியாது என வெங்கடேசன் கூறினார். மேலும் தனது 2½ வயது மகன் மீது உயில் சாசனம் எழுதி வைத்துவிட்டார்.
விவசாயி கொலை
இந்த நிலையில் வெங்கடேசனிடம் பெருமாள் சகோதரிகளுக்கு இடத்தை பாகம் பிரித்து கொடு என்று கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த 11.4.2013 அன்று பெருமாளை வெங்கடேசன் கையால் தாக்கி கீழே தள்ளி தலையணையால் முகத்தில் அமுக்கி கொலை செய்தார்.
இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.
இந்த வழக்கு ஆரணி ஒருங்கிணைந்த கோர்ட்டில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு சார்பில் வக்கீல் ராஜமூர்த்தி ஆஜரானார்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கே.விஜயா விசாரித்து தீர்ப்பு வழங்கினார்.
அதில் வெங்கடேசனுக்கு ஆயுள் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை என தீர்ப்பு கூறினார்.