உயிரை விழுங்கும் 'ஆன்லைன்' சூதாட்டம்-தடை எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


உயிரை விழுங்கும் ஆன்லைன் சூதாட்டம்-தடை எப்போது? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x

ஆன்லைன் என்று சொல்லப்படும் இணையதளத்தை பயன்படுத்துவது இன்று அத்தியாவசியமாக மாறிவிட்டது.அதில் பல நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. நன்மைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு செயல்படுபவர்கள் புத்திசாலிகள் ஆகிவிடுகிறார்கள். அதன் தீங்கு வலைகளில் சிக்கி விடுபவர்கள் இனிய உயிர்களை இழந்து போகிறார்கள்.

கரூர்

சூதாட்ட விளையாட்டுகள்

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இப்போது உயிரை விழுங்கும் விளையாட்டாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. வயது வித்தியாசம் பார்க்காமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இதில் அடிமையாகி கிடக்கின்றனர்.

இந்த வகையான சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் நபர், அடுத்து வாழ்வில் என்ன செய்வது? என்று தெரியாமல், பயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் சமீபகாலங்களாக அதிகரித்து வருகின்றன.

தொடரும் தற்கொலைகள்

கடந்த வாரத்தில்கூட மதுரை மாவட்டம் சாத்தமங்கலத்தை சேர்ந்த ஓட்டல் ஊழியர் குணசீலன் என்பவர், ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை இழந்ததால், தற்கொலை செய்து கொண்டார்.

இதேபோல், சேலம் மாவட்டம் ஆத்தூர், உடையார் பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரபு என்பவரும், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

இதுவரை 43 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக்கொண்டு இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

ஆசையை தூண்டி, விளையாட வைத்து, பணத்தை இழப்பதோடு, உயிரை மாய்க்க வைக்கும் இதுபோன்ற சூதாட்டங்களை தடை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணமே இருக்கின்றன.

தடை சட்ட மசோதா

அரசும் இந்த ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை சட்டம் கொண்டு வந்த நிலையில், அதனை சென்னை ஐகோர்ட்டு வாயிலாக சூதாட்ட நிறுவனங்கள் உடைத்தது. அதன்பின்னர், கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் மீண்டும் இதற்கான தடை சட்டம் இயற்றுவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு புதிதாக ஒரு சட்டம் இயற்ற பரிந்துரை அளித்தது. அதனை அடிப்படையாக கொண்டு, பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அவசர சட்டம் இயற்றப்பட்டு, அதற்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டன. அதற்கு கவர்னரும் ஒப்புதல் அளித்தார். பின்னர், தடை சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஒப்புதல் எப்போது?

இந்த புதிய சட்டப்படி, தமிழ்நாட்டில் எந்தவொரு தனிநபரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட முடியாது. அவ்வாறு ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் தனிநபருக்கு 3 மாத சிறை தண்டனையும், அந்த சூதாட்ட நிறுவனத்தின் தலைவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு, கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். அரசு தரப்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும், கவர்னரை நேரில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தி உள்ளார். இந்த சட்ட மசோதாவுக்கு விரைந்து கவர்னர் ஒப்புதல் கொடுத்து, சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதுகுறித்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-

தற்கொலை

தோகைமலை பகுதியை சேர்ந்த பெயிண்டர் குமரேசன்:- ஆன்லைன் சூதாட்டத்துக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் அடிமையாகி கிடக்கின்றனர். சூதாட்டத்தில் பணத்தை பறிகொடுப்பவர்கள் வாழ்க்கையை இழந்தும், குடும்பத்தை இழந்தும், நடுத்தெருவில் நின்று வருகின்றனர். சிலர் கடனை கட்ட வழி தெரியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனால் அவர்களது குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் அவலம் ஏற்படுகிறது. எனவே ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தடை செய்ய வேண்டும்.

ஆன்லைன் வகுப்புகள்

குளித்தலையை சேர்ந்த வீரமணி:- கொரோனா காலத்தில் பள்ளி, கல்லூரி வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்பட்ட போது இளைஞர்கள் பலர் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் விளையாட ஆர்வம் காட்டத்தொடங்கினர். நாளடைவில் இந்த பழக்கம் தொடர் பழக்கமாகி பலர் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு தங்களது பொருளாதாரத்தை இழக்கின்றனர். சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு கூட தள்ளப்படுகின்றனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனை உணர்ந்து தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட சட்டத்துக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.

தடை விதிக்க வேண்டும்

திருக்காடுதுறை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன்:- ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக இளைஞர்களுக்கு முதலில் ஆசை காட்டி அவர்களின் வாழ்க்கையை சீரழிப்பதோடு, இறுதியில் பணத்தை இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் தற்கொலை முடிவுக்கு கொண்டு போய் விடுகிறது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தின் மூலம் தற்கொலைகள் அதிகரித்ததால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக அரசு தடை விதிப்பதற்காக சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பியது. ஆனால் கவர்னரிடம் இருந்து இதுவரை ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்கொலைகளும் அதிகரித்து வருகிறது. எனவே மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிக்க வேண்டும். இல்லையெனில் உயிர் பலியை தடுக்க இயலாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

வேதனை அளிக்கிறது

வேலாயுதம்பாளையம் அருகே உள்ள அண்ணா நகரை சேர்ந்த ரேவதி:- ஆன்லைன் சூதாட்டத்தில் கல்லூரி மாணவர்கள் முதல் தொழில் அதிபர்கள், ஏழை, எளியவர்கள் ஈடுபட்டு பணத்தை இழப்பதுடன், தங்களது இன்னுயிரையும் இழந்து வருகின்றனர். அந்த காலக்கட்டத்தில் இது போன்ற ஆன்லைன் சூதாட்டங்கள் கிடையாது. இப்பொழுது புதுசு புதுசா ஒவ்வொரு சூதாட்டமும் வந்து கொண்டிருக்கிறது. சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்டு விடலாம் என்று எண்ணி சேமித்த பணத்தையும் இழந்து கடனாளியாகி தற்கொலை சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது வேதனை அளிக்கிறது. எனவே ஆன்லைன் சூதாட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்து உயிரிழப்பை தடுக்க வேண்டும்.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

மனநல ஆலோசகர் சுப்பிரமணியன்:- ஆன்லைன் சூதாட்டம் இன்றைய தலைமுறைகளை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது. பணத்தை குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைக்கும் ஒருதளமாகவே இது இருக்கிறது. இந்த விளையாட்டில் ஆண்களை போல் பல பெண்களும் விளையாடுகிறார்கள். சூதாட்டத்தில் பணத்தை இழப்பவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும். ஆன்லைன் சூதாட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் தனி துறையை ஏற்படுத்தி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், தமிழக அரசு இயற்றி அனுப்பிய தடை சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்கி, பலருடைய குடும்பத்தை காப்பாற்ற வேண்டும்.

நவீன மோசடி

கரூர் மேட்டு தெருவை சேர்ந்த வக்கீல் அன்பழகன்:- ஆன்லைன் சூதாட்டம் இன்றைய தலைமுறையினரை தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டு மக்களின் பணம் சுரண்டப்படுகிறது. தற்போது பணம் வைத்து விளையாடும் சூதாட்ட விளையாட்டுகள் இணையதளத்தை ஆக்கிரமித்திருப்பதும், இதில் மாத வருமானம் பெறுவோர், பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் பலரும் அடிமையாகி இருப்பதும் வேதனை அளிக்கிறது. விளையாட்டு என்கிற போர்வையில் செய்யப்படுகின்ற நவீன மோசடி. பணம் இழந்ததை தாங்க முடியாமல் தற்கொலை செய்யும் சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்களில் பார்ப்பது வேதனை அளிக்கிறது. எனவே தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட சட்டத்துக்கு கவர்னர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா கடந்து வந்த பாதை...

* 2020 நவம்பர் 21: ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை சட்டம் இயற்றப்பட்டது.

* 2021 ஆகஸ்டு 3: இந்த தடை சட்டத்தை எதிர்த்து, சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதில் அரசு விதித்த தடையை ரத்து செய்து உத்தரவிட்டது.

* 2021 நவம்பர் 13: சென்னை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

* 2022 ஜூன் 10: ஆன்லைன் சூதாட்டத்துக்கு மீண்டும் தடை சட்டம் இயற்றுவது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அரசு குழு அமைத்தது.

* 2022 ஜூன் 27: குழு அறிக்கை தாக்கல் செய்ததோடு, புதிதாக ஒரு சட்டம் இயற்ற பரிந்துரைத்தது.

* 2022 ஆகஸ்டு 26: சட்டம் இயற்றுவது தொடர்பாக பொதுமக்கள், தன்னார்வலர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

* 2022 செப்டம்பர் 26: தமிழக அமைச்சரவை கூட்டம் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது.

* 2022 அக்டோபர் 1: அவசர சட்டத்துக்கு கவர்னரும் ஒப்புதல் வழங்கினார்.

* 2022 அக்டோபர் 7: அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.

* 2022 அக்டோபர் 19: ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

* 2022 அக்டோபர் 28: சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் கேட்டு, கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story