களிமண் பொம்மை உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்- நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் கனிமொழி பேட்டி


களிமண் பொம்மை உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்- நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் கனிமொழி பேட்டி
x

களிமண் பொம்மை உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தபடும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

களிமண் பொம்மை உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தபடும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

நாடாளுமன்ற நிலைக்குழுவினர்

மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டு பல்வேறு நிலைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவராக கனிமொழி எம்.பி. உள்ளார்.

இந்த குழுவில் மொத்தம் 31 எம்.பி.க்கள் உள்ளனர். இந்த நிலைக்குழுவினர், நேற்று மதுரை விளாச்சேரியில் ஆய்வு செய்தனர். விளாச்சேரியில் தயாராகும் களிமண் பொம்மைக்கு தனி பெருமை உண்டு.

தமிழகம் மட்டுமல்லாது கேரள, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு நவராத்திரிக்கு கொலுபொம்மைகள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு குடில் பொம்மைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த களிமண் பொம்மை தயாரிப்பில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் விளாச்சேரியில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு கூடத்தை நேற்று நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் கனிமொழி எம்.பி தலைமையில் 12 எம்.பி.க்கள் பார்வையிட்டனர். அதில் கண்ணாடி குவளையில் வைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் மற்றும் கருணாநிதி சிலைகளை பார்த்து வியந்தனர்.

வாழ்வாதாரம் மேம்படுத்தப்படும்

மகளிர் சுயஉதவிக்குழு தொழில் கூடத்தை பார்வையிட்ட கனிமொழி எம்.பி.யிடம் நிருபர்கள், காவிரி விவகாரம் குறித்து என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது அவர், "நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக இங்கு வந்துள்ளேன். அரசியல் பேச விரும்பவில்லை. கைவினைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் பொம்மை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடவும், உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்படும். மழைக்காலங்களில் பொம்மை தயாரிப்பதற்கு தேவையான இடங்களில் மண் எடுப்பதற்கு அரசு வழிவகை செய்யும்" என்றார்.

அரசு வேளாண் கல்லூரியில் ஆய்வு

அதன்பின்னர் மதுரை யா.ஒத்தக்கடையில் உள்ள அரசு வேளாண்மை கல்லூரியில் உள்ள விவசாய தொழில் முனைவோர் பாதுகாப்பு மையத்தை நேரடியாக பார்வையிட்டனர்.

அப்போது விவசாய தொழில் முனைவோர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள். இந்த கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதனை நிறைவேற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கனிமொழி எம்.பி. உறுதி அளித்தார். இந்த ஆய்வின் போது குழு உறுப்பினர்கள் சின்ராஜ், ராஜ்வீர் தில்லர், நரேந்திர குமார், தலாரி ரங்கையா, கீதாபென், சியாம் சிங் யாதவ், முகமது அப்துல்லா, ராண்ணா கடாடி, நரன்பாய் ஜெ.ரத்வா, அஜய் பிரதாப் சிங், மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, நிலைக்குழு இயக்குனர் கல்யாண சுந்தரம், அலுவலர் சுனில் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story