ஆட்டோ, டாக்சி, பஸ் வாங்க 35 சதவீத மானியத்துடன் கடனுதவி


ஆட்டோ, டாக்சி, பஸ் வாங்க 35 சதவீத மானியத்துடன் கடனுதவி
x

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஆட்டோ, டாக்சி, பஸ் வாங்க 35 சதவீத மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழில் திட்டங்களுக்கு மானியம்

தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த திட்டத்தொகை ரூ.10 லட்சத்துக்கு மேலும் ரூ.5 கோடிக்கு மிகாமல் உள்ள தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ஏற்பாடு செய்யப்படுகிறது.

திட்டத் தொகையில் 25 சதவீதம்மானியமும், பட்டியல் வகுப்பு, பட்டியல் பழங்குடி இனம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் மானியமாக திட்டத்தொகையில் 10 சதவீதம் வழங்கப்படுகிறது. மானிய உச்சவரம்பு ரூ.75 லட்சமாகும். மேலும், கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் முழுமைக்கும் 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.

வயது வரம்பு

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்த பட்சம் பிளஸ்-2 தேர்ச்சி, பட்டம், பட்டயம் தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 21 வயதுக்கு குறையாமலும், உச்ச வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு 45 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனிநபர் மட்டுமின்றி தகுதி பெற்ற ஒன்றுக்கு மேற்பட்டோர் இணைந்த கூட்டாண்மைப் பங்குதாரர் அமைப்புகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். முதலீட்டாளர் பங்கு பொதுப்பிரிவினருக்கு திட்டத் தொகையில் 10 சதவீதமும், சிறப்புப் பிரிவினர் 5 சதவீதமும் செலுத்திட வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பட்டியல் வகுப்பு மற்றும் பட்டியல் பழங்குடி இனத்தைச் சேர்ந்தோர் பெருமளவு பயன்பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, மேற்குறித்த பிரிவுகளைச் சார்ந்த பயனாளிகள் பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான அனைத்து வகை வணிக வாகனங்களையும் வாங்கி வாடகைக்கு விடுவதான தொழில் திட்டங்களை அனுமதிக்க வேண்டியதன் தேவை உணரப்பட்டு அவ்வாறே முடிவெடுக்கப் பட்டுள்ளது.

வாகனங்கள்

எனவே, திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதி பெற்ற பட்டியல் வகுப்பு மற்றும் பட்டியல் பழங்குடி இனத்தினர் ஆட்டோ, டாக்சி, டூரிஸ்ட் வாகனங்கள், ஆம்புலன்ஸ், பஸ், மினி பஸ், சரக்கு போக்குவரத்துக்கான லாரி போன்றவற்றை வாங்கி இத்திட்டத்தின் கீழ் 35 சதவீத தனிநபர் மானியமும், கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் முழுமையும் 3 சதவீத வட்டி மானியமும் பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் தெரித்துள்ளார்.


Next Story