வெளிநாட்டில் வேலையிழந்து திரும்பியோருக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி


வெளிநாட்டில் வேலையிழந்து திரும்பியோருக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி
x

வெளிநாட்டில் வேலையிழந்து திரும்பியோருக்கு தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது.

அரியலூர்

கொரோனா தொற்று பரவலால் வெளிநாட்டில் வேலையிழந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் தமிழக அரசு புலம்பெயர்ந்தோர் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு விசாவுடன் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து கொரோனா தொற்று பரவலால் வேலையிழந்து 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி அன்று அல்லது அதற்கு பிந்தைய நாட்களில் நாடு திரும்பிய தமிழர்கள் இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 18-க்கு மேலாகவும், அதிகபட்ச வயது 55-க்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையிலும், வியாபார மற்றும் சேவை தொழில் திட்டங்களுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும், கடனுதவி பெற்றுக்கொள்ளலாம். திட்ட தொகையில் பொதுப்பிரிவு பயனாளர்கள் 10 சதவீதம் மற்றும் சிறப்பு பிரிவினர் 5 சதவீதத்தை தமது பங்களிப்பாக செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகை வங்கிக்கடனாக வழங்கப்படும். அரசு மானியமாக திட்ட தொகையில் 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.2½ லட்சம் வழங்கப்படும். மானியத்தொகை 3 ஆண்டுகளுக்கு வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, பின்னர் கடன் தொகையில் சரி செய்யப்படும்.

இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாக கடன் வழங்கப்பட்ட பின், 6 மாதங்கள் கழித்து முதல் தவணை தொகையினை வங்கியில் செலுத்த ஆரம்பித்து 5 ஆண்டுகளுக்குள் கடன் தவணையினை திரும்ப செலுத்த வேண்டும். கொரோனா தொற்று பரவலால் வேலையிழந்து தாயகம் திரும்பிய அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கி பயன்பெற பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், வாலாஜாநகரம், அரியலூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 8925533925, 8925533926 என்ற செல்போன் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.


Next Story