உள்ளாட்சி இடைத்தேர்தல்: 2 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை


உள்ளாட்சி இடைத்தேர்தல்:  2 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை
x

தேனி மாவட்டத்தில் வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பதவிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை 2 மையங்களில் எண்ணப்படுகிறது

தேனி

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த பதவிகளுக்கு கடந்த 9-ந்தேதி இடைத்தேர்தல் நடந்தது. அதன்படி தேனி மாவட்டத்தில் வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், டி.வாடிப்பட்டி ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினர், சின்னஓவுலாபுரம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் ஆகிய 3 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.

வாக்குச்சீட்டு முறையில் நடந்த இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதற்காக சின்னமனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் ஆகிய 2 இடங்களில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சின்னஓவுலாபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை சின்னமனூரில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், மற்ற இரு பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நடக்கிறது. இதற்காக இந்த வாக்கு எண்ணும் மையங்களில் 120-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்து நாளை பிற்பகலுக்குள் வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.


Next Story