நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- புதுச்சேரி


நாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- புதுச்சேரி
x
தினத்தந்தி 13 April 2024 5:33 AM GMT (Updated: 13 April 2024 9:22 AM GMT)

புதுவை எம்.பி. தொகுதி காங்கிரஸ் கோட்டையாக விளங்குகிறது.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒரு எம்.பி. தொகுதி மட்டும் உள்ளது. அதேநேரத்தில் 30 சட்டமன்ற தொகுதிகள் இந்த எம்.பி. தொகுதிக்குள் வருகின்றன. இதில் புதுச்சேரி பிராந்தியத்தில் 23, காரைக்காலில் 5, கேரள மாநில பகுதியில் மாகி, ஆந்திர மாநிலம் காக்கி நாடா அருகே ஏனாம் ஆகிய தொகுதிகள் அடங்கி உள்ளன. பூகோள ரீதியாக இந்த 4 பிராந்தியங்களும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாதவை. பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்த புதுச்சேரியில் கடந்த 1963-ம் ஆண்டு தான் முதன் முதலாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து இதுவரைபுதுச்சேரி 1 5 தேர்தல்களை சந்தித்துள்ளது.

காங்கிரசின் கோட்டை

புதுவை எம்.பி. தொகுதி காங்கிரஸ் கோட்டையாக விளங்குகிறது. அதாவது, இங்கு காங்கிரஸ் 11 முறையும், தி.மு.க., பா.ம.க., அதி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளன.முதல் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சிவப்பிரகாசம் வெற்றிபெற்றார். அடுத்து 1967 தேர்தலிலும் காங்கிரசே வெற்றியை ருசித்தது. அக்கட்சியைசேர்ந்த சேதுராமன் வெற்றி பெற்றார். புதுச்சேரியில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களும் போட்டியிட்டு வெற்றி பெற்ற வரலாறும் உண்டு. அதாவது 1971-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த மோகன் குமாரமங்கலம் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டு வெற்றிபெற்றார்.புதுவை எம்.பி. தொகுதியில் தொடர்ச்சியாக காங்கிரஸ் வெற்றிபெற்று வந்த நிலையில் அதை உடைத்தெறிந்து சாதனை படைத்தது அ.தி.மு.க., 1977-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் அரவிந்த பாலாபழனூர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அ.தி.மு.க.வின் முதல் வெற்றி இது.

'ஹாட்ரிக்' சாதனை

ஆனால் அடுத்தடுத்த தேர்தல்களில் வரலாறு திரும்பியது. அதாவது, 1980, 1984,1989 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சண்முகம் தொடர்ந்து வெற்றி பெற்று'ஹாட்ரிக்" சாதனை படைத்தார். ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட நிலையில் 1991-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பரூக் மரைக்காயர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அடுத்து 1996தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பரூக் மரைக்காயர், தி.மு.க. வேட்பாளர் கல்மண்டபம் ஆறுமுகத்தை வெறும் 284 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.அதாவது பரூக் மரைக்காயர் 1 லட்சத்து 83 ஆயிரத்து 986 வாக்குகளும், கல்மண்டபம் ஆறுமுகம் 1 லட்சத்து 83 ஆயிரத்து 702 வாக்குகளும் பெற்றனர்.

புதுவை நாடாளுமன்ற வரலாற்றில் மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் பெற்ற வெற்றி இதுதான். அடுத்ததாக 1998-ல் நடந்த தேர்தலில் தி.மு.க.வேட்பாளர் கல்மண்டபம் ஆறுமுகம் வெற்றி பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சண்முகத்தை தோற்கடித்தார். 1999-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பரூக் மரைக்காயர்மீண்டும் வென்றார்.

என்.ஆர்.காங்கிரசால் திருப்புமுனை

2004 தேர்தலில் காங்கிரஸ்- தி.மு.க.கூட்டணியில் புதுவை தொகுதிபா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டு பேராசிரியர்ராமதாஸ் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து அ.தி.மு.க.-பா.ஜனதாகூட்டணியில் தமிழகத்தை சேர்ந்த லலிதா குமாரமங்கலம் போட்டியிட்டார். தேர்தலில் பா.ம.க. வேட்பாளர் பேராசிரியர் ராமதாஸ் வெற்றிபெற்றார். அடுத்து 2009தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய மந்திரி நாராயணசாமி வென்றார். 2014 தேர்தலில் புதிதாக உருவான மாநில கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் தனது முதல் வெற்றியை ருசித்தது. புதுவை வரலாற்றில் புதிதாக உதயமான ஒரு மாநில கட்சி எம்.பி. தேர்தலில் வென்றதைஇன்றளவும் திருப்புமுனையாகவே கருதப்படுகிறது.

வாக்காளர்கள் எவ்வளவு?

புதுச்சேரி எம்.பி. தொகுதியில் 4 லட்சத்து79 ஆயிரத்து 329 ஆண்கள், 5 லட்சத்து 41 ஆயிரத்து 437 பெண்கள், 3-ம் பாலினத்தவர் 148 பேர் என மொத்தம் 10 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்காளர்கள் உள்ளனர். அதாவது புதுச்சேரி பிராந்தியத்தில் 7 லட்சத்து 84 ஆயிரத்து 335வாக்காளர்களும், காரைக்காலில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 214 வாக்காளர்களும்,மாகியில் 31 ஆயிரத்து 10 வாக்காளர்களும், ஏனாமில் 39 ஆயிரத்து 355 வாக்காளர்களும் உள்ளனர்.

2019- தேர்தல் முடிவு எப்படி?

தேர்தலில் முதல் 5 இடங்களைபிடித்தவர்கள் விவரம் வருமாறு:-

வைத்திலிங்கம் (காங்)...........4,44,983

நாராயணசாமி கேசவன் (என்.ஆர்.காங் 2,47,956

டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் (மக்கள் நீதி மய்யம்)-38,068

ஷர்மிளா பேகம் (நாம் தமிழர் கட்சி) -22,857

தமிழ்மாறன் (சுயே)-4,791

வெற்றி யார் கையில்?

புதுச்சேரி எம்.பி. தொகுதியை பொறுத்தவரை 11 முறை காங்கிரஸ் வென்றுள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சரும், தற்போதைய எம்.பி.யுமான வைத்திலிங்கம் மீண்டும் போட்டியிடு

கிறார். பா.ஜனதா சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அ.தி.மு.க. சார்பில் இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தள், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் மேனகா ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.


Next Story