புதிய பஸ் நிலையத்திற்குள் நீண்ட தூர பஸ்கள் வந்து செல்ல வேண்டும்


புதிய பஸ் நிலையத்திற்குள் நீண்ட தூர பஸ்கள் வந்து செல்ல வேண்டும்
x
தினத்தந்தி 29 Aug 2023 12:15 AM IST (Updated: 29 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் நீண்ட தூர பஸ்கள் வந்து செல்ல வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் நீண்ட தூர பஸ்கள் வந்து செல்ல வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுற்றுலா, ஆன்மிக தலம்

சீர்காழி அருகே பூம்புகார்,தரங்கம்பாடி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள், பரிகார ஸ்தலங்களான வைத்தீஸ்வரன் கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் கோவில், நாங்கூர் பெருமாள் கோவில், திருவாலி லட்சுமி நாராயண பெருமாள் கோவில், சீர்காழி தாடாளன் பெருமாள் கோவில், சீர்காழி சட்டைநாதர் கோவில், திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்கள், பழையாறு, திருமுல்லைவாசல், பூம்புகார் மீன்பிடி துறைமுகங்களை உள்ளடக்கிய பகுதியாக சீர்காழி திகழ்ந்து வருகிறது.

இ்ந்த நிலையில் மேற்கண்ட இடங்களுக்கு பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் என ஏராளமானோர் தினமும் ரெயில் மற்றும் பஸ்கள் மூலம் சீர்காழிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சென்னை, கடலூர், பாண்டி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட நீண்ட தூர பஸ்கள் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் வராமல் புறவழிச் சாலையிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்வதாகவும், குறிப்பாக இரவு நேரங்களில் இறக்கிவிட்டு செல்வதால் மாற்று பஸ் இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நீண்ட தூரத்தில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள், வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சாலை மறியல்

இது குறித்து சமூக ஆர்வலர் ராஜேஷ் கூறுகையில், சீர்காழி பகுதியில் வழிபாட்டு தலங்கள், மீன்பிடி துறைமுகங்கள், சுற்றுலா தலங்கள், உள்ளிட்ட ஏராளமான இடங்கள் உள்ளன. இங்கு வரும் நீண்ட தூர பஸ்கள் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்கு வராமல் புறவழிச் சாலையிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் பயணிகள் கூடுதல் செலவு செய்து ஆட்டோக்கள் மூலம் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் வர வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றனர்.

மேலும் இரவு நேரங்களில் புறவழிச் சாலையில் இறக்கி விடுவதால் போக்குவரத்து வசதி இல்லாமல் நீண்ட நேரம் பயணிகள் காத்துக் கிடக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நீண்ட தூர அனைத்து பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து சென்றால் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார். இல்லையென்றால் சீர்காழி புறவழி சாலையில் சாலை மறியல் போராட்டம் செய்யப்படும் என தெரிவித்தார்.


Related Tags :
Next Story