பெரம்பலூரில் நெடுந்தூர ஓட்டப்போட்டி


பெரம்பலூரில் நெடுந்தூர ஓட்டப்போட்டி
x

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் பெரம்பலூரில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட நெடுந்தூர ஓட்டப்போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகை அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.

பெரம்பலூர்

கலெக்டர் தொடங்கி வைத்தார்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூர் மாவட்டம் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் மாரத்தான் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டி நேற்று நடத்தப்பட்டது. பெரம்பலூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு உள்ள சாலையில் இருந்து புறப்பட்ட நெடுந்தூர ஓட்டப்போட்டியை மாவட்ட கலெக்டர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு 8 கிலோ மீட்டர் தூரத்திற்கும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரத்திற்கும், பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தூரத்திற்கும் நெடுந்தூர ஓட்டப்போட்டி நடத்தப்பட்டது.

ஆர்வத்துடன் ஓடினர்

இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள், இளம்பெண்கள், பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர். 5 கிலோ மீட்டர் நெடுந்தூர ஓட்டப்போட்டி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 8 கிலோ மீட்டர் நெடுந்தூர ஓட்டப்போட்டி பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்திலும், 10 கிலோ மீட்டர் நெடுந்தூர ஓட்டப்போட்டி பெரம்பலூர்-துறையூர் சாலையில் செஞ்சேரியிலும் நிறைவடைந்தது.

17 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நெடுந்தூர ஓட்டப்போட்டியில் முதலிடத்தை பிரேம்நாத்தும், 2-ம் இடத்தை ரமேசும், 3-ம் இடத்தை இளவழகனும், பெண்களுக்கான ஓட்டப்போட்டியில் பெரம்பலூர் மாவட்ட அரசு மகளிர் விளையாட்டு விடுதி மாணவிகளான அசினா முதலிடத்தையும், சுபத்ரா 2-ம் இடத்தையும், ஹர்ஷினி 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

பரிசுத்தொகை

25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கான ஓட்டப்போட்டியில் முதலிடத்தை ஆயுதப்படை போலீஸ் மகேஸ்வரனும், 2-ம் இடத்தை தர்மராசுவும், 3-ம் இடத்தை அருண்குமாரும், பெண்களுக்கான ஓட்டப்போட்டியில் முதலிடத்தை ஆயுதப்படை போலீஸ் அனுசியாவும், 2-ம் இடத்தை இந்திராணியும், 3-ம் இடத்தை ஆயுதப்படை போலீஸ் திலகவதியும் பிடித்தனர். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் நெடுந்தூர ஓட்டப்போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், 2-ம் இடத்தை பிடித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரமும், 3-ம் இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ.1,000-ம் அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.


Next Story