மாமியாரை கத்தியால் குத்திய லாரி டிரைவர் கைது


மாமியாரை கத்தியால் குத்திய லாரி டிரைவர் கைது
x

மாமியாரை கத்தியால் குத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி

காதல் திருமணம்

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள சிறுநாவலூர் ஊராட்சி எஸ்.என்.புதூர் மேலத்தெருவை சேர்ந்தவர் சூர்யா (வயது 23), லாரி டிரைவர். இவர் தனது அத்தை அன்னக்கிளியின் மகளான நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த கல்பனாவை பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளார். இதற்கிடையே குடும்பத்தகராறு காரணமாக கல்பனா தனது தாய் வீடான குன்னூருக்கு குழந்தையுடன் சென்று தங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் எஸ்.என்.புதூரில் நடைபெற்று வரும் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அன்னக்கிளி தனது மகளுடன் வந்திருந்தார்.

கத்திக்குத்து

இதனை அறிந்த சூர்யா தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் சூர்யாவுக்கும், அன்னக்கிளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சூர்யா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அன்னக்கிளியை குத்தியுள்ளார். இதில் கையில் பலத்த காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த சம்பவம் குறித்து உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து மாமியாரை கத்தியால் குத்திய சூர்யாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story