லாரி, வாய்க்காலில் கவிழ்ந்து வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலி


லாரி, வாய்க்காலில் கவிழ்ந்து வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலி
x

லாரி, வாய்க்காலில் கவிழ்ந்து வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலி

திருவாரூர்

திருவாரூர் அருகே கோழி ஏற்றி வந்த லாரி வாய்க்காலில் கவிழ்ந்ததில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள்.

வடமாநில தொழிலாளர்கள்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரை சேர்ந்தவர்கள் நோபோ மஜி(வயது 29), சவுடோ மஜி(27). இவர்கள் இருவரும் தஞ்சை மாதாக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு மொத்த விற்பனை கோழிக்கடையில் கடந்த 2 மாதங்களாக தங்கி இருந்து வேலைபார்த்து வந்தனர்.

இவர்களில் நோபோ மஜிக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகளும், சவுடோமஜிக்கு ஒரு குழந்தையும் உள்ளனர்.

லாரி தலைகுப்புற கவிழ்ந்தது

இவர்கள் இருவரும் தஞ்சையில் இருந்து லாரியில் கோழிகளை ஏற்றிக்கொண்டு புதுச்சேரி மாநிலம் காரைக்காலுக்கு வந்து கொண்டிருந்தனர். திருவாரூர் அருகே கொரடாச்சேரி போலீஸ் சரகம் மேப்பலம் என்கிற இடத்தில் நேற்று அதிகாலை லாரி வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு உள்ள ஒட்டக்குடி வாய்க்காலில் லாரி தலைகுப்புற கவிழ்ந்தது.

2 பேர் பலி

இதில் லாரியின் மேலே அமர்ந்து இருந்த நோபோ மஜி, சவுடோமஜி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். லாரி டிரைவர் கலையரசன் மற்றும் கோழிக்கடை மேற்பார்வையாளர் மணிகண்டன் ஆகிய இருவரும் லாரியின் உள்ளே அமர்ந்து இருந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். லாரியில் கூண்டில் வைத்து கோழிகள் கொண்டு செல்லப்பட்டதால் ஒரு சில கோழிகள் மட்டும் இறந்தன.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story