சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஒலிபெருக்கி அறிவிப்புகள் நிறுத்தம் ..!


சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஒலிபெருக்கி அறிவிப்புகள் நிறுத்தம் ..!
x
தினத்தந்தி 28 Feb 2023 1:48 AM GMT (Updated: 28 Feb 2023 2:10 AM GMT)

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ஒலிபெருக்கி அறிவிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.

சென்னை,

ரெயில் நிலையத்தில் நுழைந்தாலே நம்மை முதலில் வரவேற்பது "பயணிகளின் கனிவான கவனத்திற்கு" என்ற இனிமையான வரவேற்பு தான். பின்பு நாம் செல்ல வேண்டிய ரெயில் வருகை, புறப்படும் நேரம், நடைமேடை எண், ரெயில் தாமதமாகும் நேரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் ரெயில் நிலையத்தில் உள்ள ஒலிபெருக்கியே நமக்கு சொல்லிவிடும்.

பாமர மக்கள் தொடங்கி சாப்ட்வேர் என்ஜினீயர் என யார் ரெயில் நிலையத்துக்கு வந்தாலும் முதலில் கேட்பது அந்த ஒலிபெருக்கியின் சத்தத்தைதான். அந்த அளவுக்கு ரெயில் நிலைய ஒலிபெருக்கிக்கும், பயணிகளுக்குமான தொடர்பு நீண்ட காலமாகவே தொடர்ந்து வருகிறது.

எல்லாம் டிஜிட்டல் மயம்

இதற்கு முன்பு வரை ஒலிபெருக்கியுடன் சேர்த்து சென்டிரல் ரெயில் நிலையம் முன்பு ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பஸ் நிறுத்தம், புறநகர் ரெயில் முனையம், வால்டாக்ஸ் சாலையில் 5-ம் எண் கேட் ஆகிய 3 நுழைவு பகுதிகளிலும் தமிழ், ஆங்கிலம், இந்தியில் ரெயில்களின் வருகை மற்றும் டிஜிட்டல் திசைகள் வைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக நுழைவு வாயிலில் பிரெய்லி முறையிலான வரைபடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்டிரல் ரெயில் நிலையத்தில் இனி ஒலிபெருக்கியால் வெளியிடப்படும் தகவல்களை கேட்க முடியாது. எல்லாமே டிஜிட்டல் மயமாக மாறிவிட்டதால் ரெயில் தொடர்பான அனைத்து தகவல்களையும் இனி டிஜிட்டல் டி.வி.யில்தான் காண வேண்டும்.

வரமா? சாபமா?

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பெரிய அளவிலான டி.வி. ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அதில் ரெயில் நிலையத்தில் இருந்து தினசரி கிளம்பும் ரெயில்களின் புறப்படும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் ரெயில் நிலையத்தில் உள்ள டி.வி.யின் திரையில் ஒளிபரப்பப்படும். என்ன தான் படித்தவர்கள் நாளடைவில் இந்த முயற்சிக்கு பழக்கப்படுத்திக்கொண்டாலும், எழுத படிக்க தெரியாத மக்கள் என்ன செய்வார்கள்? ஒலிபெருக்கி நிறுத்தப்பட்டுள்ளதால் எழுத படிக்க தெரியாத பாமர மக்கள் ரெயில் நிலையத்தில் குழம்பி நிற்கும் சூழலை அதிகம் காணமுடிகிறது.

இதுநாள் வரை ஒலிபெருக்கியில் எளிதாக தகவல்களை தெரிந்து கொண்ட மக்கள், டிவி. திரையில் அந்த தகவல்களை காணும்போது அருகில் இருப்பவர்களிடம் ரெயில் எத்தனை மணிக்கு புறப்படும்? என்று தகவலை கேட்டு பெறும் சூழலுக்கு மக்கள் தள்ளப்படுவார்கள். மேலும் பார்வை தெரியாதவர்கள், பார்வை குறைபாடு உடையவர்களுக்கும் நடைமேடை எண், ரெயில் புறப்படும் நேரம்? போன்றவற்றை தெரிந்து கொள்வது சிரமத்தை ஏற்படுத்தும். மக்களை குழப்பும் இத்தகைய சோதனை முயற்சி வரமா? சாபமா? என்ற கேள்விக்கு வழிவகுத்துள்ளது.

சோதனை முயற்சி

கடைசி நேரத்தில் ரெயில் நிலையம் வருபவர்கள் டிஜிட்டல் திரையை தேடி அலைய வேண்டிய சூழல் ஏற்படும். இதற்கு முன்பு வரை சிறிது நேரத்தில் புறப்பட இருக்கும் ரெயில் குறித்த தகவல்களை ஒலிபெருக்கியில் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இதனால் பயணிகள் ரெயிலை தவறவிடாமல் இருப்பதற்கு ஒலிபெருக்கி ஒரு எச்சரிக்கை மணியாகவே ஒலித்து கொண்டிருந்தது. இனி அந்த எச்சரிக்கை மணியை கேட்க முடியாது. இந்த டிஜிட்டல் திரை தகவல் ஒளிபரப்பும் முறையை சோதனை முயற்சியாகவே ரெயில்வே நிர்வாகம் தொடங்கியுள்ளது. ஆனால் ஒலிபெருக்கி இல்லாத ரெயில் நிலையத்தை, அமைதியான ரெயில் நிலையத்தை மக்கள் ஏற்றுகொள்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Next Story