லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி குறைவு
கூடலூர் அருகே லோயர்கேம்ப் நிலையத்தில் மின்உற்பத்தி குறைந்தது.
கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின் உற்பத்தி நிலையம் உள்ளது. முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் இங்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் வரை அணையில் இருந்து வினாடிக்கு 1,867 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்தது. இதன் காரணமாக 4 ஜெனரேட்டர்கள் மூலம் வினாடிக்கு 168 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டமும் சரிய தொடங்கி உள்ளது.
இதன் காரணமாக அணையில் இருந்து நேற்று காலை முதல் தமிழக பகுதிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 1867 கனஅடியில் இருந்து 511 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில் 2 ஜெனரேட்டரில் மட்டும் தலா 23 மெகாவாட் வீதம் 46 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நேற்று முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 140.85 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 235 கனஅடியாகவும் இருந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.