லோயர்கேம்ப் நிலையத்தில் மின்உற்பத்தி குறைவு


லோயர்கேம்ப் நிலையத்தில் மின்உற்பத்தி குறைவு
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-31T00:16:40+05:30)

கூடலூர் அருகே லோயர்கேம்ப் நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்தது.

தேனி

கூடலூர் அருகே லோயர்கேம்பில் மின்சார உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மின்உற்பத்திக்காக இங்கு 4 ஜெனரேட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லை. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டமும் வேகமாக சரியத்தொடங்கி உள்ளது.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நேற்று முன்தினம் வரை வினாடிக்கு 1,033 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 93 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை முதல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 967 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக மின் உற்பத்தியும் குறைய தொடங்கி உள்ளது. நேற்று காலை லோயர்கேம்ப் மின்உற்பத்தி நிலையத்தில், 3 ஜெனரேட்டர்களில் தலா 29 மெகாவாட் வீதம் மொத்தம் 87 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று அணையின் நீர்மட்டம் 128.45 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 124 கனஅடியாகவும் இருந்தது.


Related Tags :
Next Story