சீசன் தொடங்கியும் பாத்திகளில் உப்பு உற்பத்தி குறைவு -தொழிலாளர்கள் ஏமாற்றம்
சீசன் தொடங்கியும் பாத்திகளில் உப்பு உற்பத்தி குறைவு -தொழிலாளர்கள் ஏமாற்றம்
பனைக்குளம்
சீசன் தொடங்கியுள்ள நிலையிலும் பனைக்குளம் நதிப்பாலம் பகுதியில் பாத்திகளில் உப்பு விளைச்சல் குறைவால் தொழிலாளர்கள் ஏமாற்றம்.
உப்பு உற்பத்தி
ராமாநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடித் தொழிலுக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி தொழிலும் அதிகமாக நடைபெற்று வருகின்றது. குறிப்பாக தேவிபட்டினம் அருகே உள்ள கோப்பேரிமடம், உப்பூர், திருப்பாலைக்குடி, சம்பை, பத்தனேந்தல், திருப்புல்லாணி அருகே ஆனைகுடி மற்றும் பனைக்குளம் அருகே நதிப்பாலம் உள்ளிட்ட ஊர்களிலும் உப்பு தொழிலை நம்பி ஏராளமான உப்பள பாத்திகள் உள்ளன. அதுபோல் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கோடை கால சீசன் தொடங்கிய பின்னர் உப்பு உற்பத்தி செய்யும் சீசனும் தொடங்கும். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் வரை உப்பு உற்பத்தி நடைபெறும்.
இந்த நிலையில் இந்த ஆண்டு தற்போது கோடை கால சீசன் தொடங்கியுள்ள நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் அருகே உள்ள நதிப்பாலம் பகுதியில் உள்ள உப்பள பாத்திகளில் உப்பு உற்பத்தி செய்யும் தொழில் விறுவிறுப்பு அடைந்துள்ளது. சீசன் தொடங்கியுள்ள நிலையிலும் பாத்திகளில் உப்பு விளைச்சல் மிக மிக குறைவாக உள்ளதாக தொழிலாளர்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர்.
குறையவில்லை
இதுகுறித்து நதிப்பாலம் பகுதியில் உள்ள உப்பள தொழிலாளி தமிழ்ச்செல்வன் கூறியதாவது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடர்ந்து வைகை ஆற்றில் இருந்து திறக்கப்பட்ட வெள்ள நீர் நதிப்பாலம் வழியாகவே கடலுக்கு சென்று கலந்தது. தொடர்ந்து பல நாட்களாக வைகை தண்ணீர் இந்த வழியாகவே சென்றது. வெள்ள நீர் வரத்தால் பாத்திகளில் இந்த ஆண்டு உப்பு விளைச்சல் மிக குறைவாகவே உள்ளது. கடல் தண்ணீரில் உப்புச்சத்து அதிகம் உள்ளது. ஆனால் வெள்ள நீரில் உப்புச்சத்து இல்லாததால் பாத்திகளில் இன்னும் அந்த ஈரப்பதம் குறையவில்லை. இன்னும் ஒரு சில வாரங்கள் கடந்த பின்னர் தான் ஓரளவு உப்பு விளைச்சல் இருக்க வாய்ப்புகள் இருக்கும். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக உப்பு உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றேன்.
தற்போது உப்பின் தேவை அதிகமாக இருந்தும் விளைச்சல் குறைவாக இருப்பதால் உப்புக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒன்றரை கிலோ உப்பு ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாத்தியிலிருந்து எடுக்கப்படும் கல் உப்புகள் பனைக்குளம், சித்தார்கோட்டை, உச்சிப்புளி, புதுமடம், அழகன்குளம், ஆற்றங்கரை, புதுவலசை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக கொண்டு சென்று சில்லரை விற்பனை செய்து வருகின்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.