எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்தம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு20 ஆயிரம் உரிமையாளர்கள் பயனடைவர்


எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்தம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு20 ஆயிரம் உரிமையாளர்கள் பயனடைவர்
x
தினத்தந்தி 2 Sept 2023 12:30 AM IST (Updated: 2 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்த காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளது. இதனால் 20 ஆயிரம் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பயனடைய உள்ளனர்.

டேங்கர் லாரிகள்

நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்க உறுப்பினர்களின் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் மூலம் சமையல் எரிவாயுவை எடுத்து செல்லும் பணி நடந்து வருகிறது. இதற்காக ஆயில் நிறுவனங்களுடன் வாடகை ஒப்பந்தத்தை டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.

அதன்படி மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் தமிழ்நாடு மற்றும் கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள 7 எண்ணெய் சேமிப்பு கிடங்குகளில் இருந்து எரிவாயுவை சிலிண்டர்களில் நிரப்பும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த பணியில் தென் மண்டலத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன.

2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

முன்னதாக இந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ஒப்பந்த காலம் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இதனிடையே வாடகை ஒப்பந்த காலத்தை மேலும் சில ஆண்டுகள் நீட்டிப்பு செய்ய வேண்டும் என மத்திய அரசு மற்றும் ஆயில் நிறுவன அதிகாரிகளிடம் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் மத்திய அரசு, டேங்கர் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்த காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று முன்தினமும், நேற்றும் கால நீட்டிப்பு செய்வதற்கு ஆயில் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் ஒப்பந்த பணிகள் தென்மண்டல பல்க் எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலக வளாகத்தில் நடந்தது. இதனால் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

20 ஆயிரம் பேர் பயனடைவர்

இதுகுறித்து தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் கூறுகையில், டேங்கர் லாரிகளுக்கான வாடகை ஒப்பந்த காலத்தை மேலும், 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தோம். எங்களது கோரிக்கையை ஏற்று ஆயில் நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்த காலத்தை நீட்டிப்பு செய்துள்ளது. இதனால் 20 ஆயிரம் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பயனடைவார்கள். இதற்காக உதவிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இதன் மூலம் வாழ்வாதாரம் மேம்படுவதோடு, மேலும் 2 ஆண்டுகளுக்கு பிரச்சினைகள் இன்றி தொழிலை நடத்த முடியும் என்றார்.

அப்போது பா.ஜ.க. மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில தலைவர் லோகேந்திரன், விவசாய அணி மாநில செயலாளர் ராதிகா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story