ஆ.ராசாவை பேச வைத்து மு.க.ஸ்டாலின் மோசமான அரசியல் செய்கிறார் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மறைக்க ஆ.ராசாவை பேச வைத்து மு.க.ஸ்டாலின் மோசமான அரசியல் செய்வதாக திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
அ.தி.மு.க பொதுக்கூட்டம்
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், திண்டுக்கல் மணிக்கூண்டில் நேற்று நடைபெற்றது. இதற்கு வடக்கு பகுதி செயலாளர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். இதில் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 1½ ஆண்டுகளில் மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. ஆட்சிக்கு வந்த உடனே சொத்து வரியை பல மடங்கு உயர்த்தினர். தற்போது மின்கட்டணத்தையும் கடுமையாக உயர்த்தி விட்டனர். கொலை, கொள்ளை, கற்பழிப்பு என குற்றங்கள் அதிகரித்து சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. இதனால் தி.மு.க. ஆட்சியின் அவலங்களை மறைக்க மு.க.ஸ்டாலின் நாடகம் போடுகிறார்.
மோசமான அரசியல்
1½ ஆண்டுகள் தி.மு.க. செய்த தவறுகளை மறைப்பதற்காக ஆ.ராசாவை பேச வைத்துள்ளார். இந்துக்களை மிகவும் கேவலமாக ஆ.ராசா பேசி இருக்கிறார். அதோடு தன் மீது வழக்கு போடுங்கள் என்று மீண்டும் பேசுகிறார்.
முதல்-அமைச்சராக பதவி ஏற்கும் போது அனைத்து மக்களையும் சமமாக பார்ப்பேன் என்று எடுத்த உறுதிமொழியை மு.க.ஸ்டாலின் மறந்து விட்டார். அதனால் தான் இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஆ.ராசாவின் பேச்சு மத மோதல்களை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. அதை மக்கள் கேள்வி கேட்க வேண்டும். அ.தி.மு.க. கொண்டு வந்த நல்ல திட்டங்களை நிதி இல்லை என்று கூறி தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது.
வரிப்பணத்தில் கருணாநிதிக்கு பேனா
அதேநேரம் மக்கள் வரிப்பணத்தில் கருணாநிதி பெயரில் ரூ.37 கோடிக்கு நினைவு மண்டபம், ரூ.87 கோடிக்கு கடலில் பேனா, ரூ.12 கோடியில் அருங்காட்சியகம், ரூ.114 கோடியில் நூலகம் கட்டப்படுகிறது. தி.மு.க. கட்சியின் பணத்தில் அதை செய்யலாமே? மக்கள் வரி பணத்தை மக்களுக்கு செலவு செய்யாமல் வீணடிக்கலாமா? மேலும் அ.தி.மு.க. திட்டங்களுக்கு தி.மு.க. தனது பெயரில் ஸ்டிக்கர் ஒட்டுகிறது.
இத்தகைய தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்று தான் அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கினார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வோடு சேர்ந்து குழப்பம் ஏற்படுத்த முயன்றார். இதனால் ஒற்றை தலைமை வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் விரைவில் நடைபெறும். அதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு ஆவார்.
ஆட்சி மாற்றம்
மராட்டியத்தில் சிவசேனாவின் ஆட்சி பிடிக்காமல் எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து சென்றதால் ஷிண்டே முதல்-அமைச்சராகி இருக்கிறார். அதேபோல் தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்துக்கு பணிகள் நடப்பதாக கூறுகின்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அந்த நிலை வந்தால் வரவேற்போம். அதோடு நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க.வை வெற்றிபெற வைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் மருதராஜ், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், கழக வக்கீல் அணி இணை செயலாளர் பாபுமுருகவேல், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் ராஜ்மோகன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாரதிமுருகன், இளைஞர் அணி செயலாளர் வி.டி.ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. பி.கே.டி.நடராஜன், பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, முரளிதரன், ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், தலைமை கழக பேச்சாளர்கள் சந்திரகாசன், ஜலேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.