மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

மதனகோபாலசுவாமி கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பெரம்பலூர்

பங்குனி உத்திர திருவிழா

பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் பிராமணர் சங்கம் சார்பில் நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி மூலவர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், மகாதீபாராதனையும் நடந்தது. பின்னர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட மதனகோபாலசுவாமியை, ஸ்ரீதேவி, பூதேவியுடன் பல்லக்கில் வைத்து, கொடிமரத்தின் முன்பு எழுந்தருள செய்து, கொடியேற்றப்பட்டது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா... கோபாலா... என்ற கோஷங்களை எழுப்பினர். சிறப்பு பூஜைகள் மற்றும் கொடியேற்ற உற்சவத்தை கோவில் அர்ச்சகர் பட்டாபிராமன் தலைமையில் சென்னை திருமழிசை ஆழ்வார் திருக்கோவில் பட்டாச்சாரியார் திரிவிக்ரமன் குழுவினர் நடத்தினர்.

விழாவில் கோவில் செயல் அலுவலர் ராஜதிலகம், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள், கோவில் ஸ்தானீகம் நாராயணஅய்யர், தமிழ்நாடு பிராமணர் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாநில பொதுச்செயலாளர் வக்கீல் சீனிவாசமூர்த்தி, பொருளாளர் சஞ்சீவிராவ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவில் ஹம்ச வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது.

5-ந் தேதி தேரோட்டம்

இதைத்தொடர்ந்து இன்று (புதன்கிழமை) சிம்ம வாகனத்திலும், நாளை (வியாழக்கிழமை) பல்லக்கு, அனுமந்த வாகனத்திலும், நாளை மறுநாள் பல்லக்கு, சேஷவாகனத்திலும் சுவாமி புறப்பாடு, ஏப்ரல் 1-ந் தேதி உதயகருடசேவை, வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 2-ந் தேதி பல்லக்கு, யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. முக்கிய திருவிழாவான திருக்கல்யாண உற்சவம் 3-ந்தேதி மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. இரவில் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா நடக்கிறது.

4-ந் தேதி வெண்ணெய்த்தாழி உற்சவமும், இரவு குதிரை வாகனத்தில் திருவீதி உலாவும், 5-ந் தேதி காலை 9 மணிக்கு ரதா ரோஹனம், 10 மணிக்கு தேரோட்டத்தையொட்டி திருத்தேர் வடம்பிடித்தலும், 6-ந்தேதி காலை துவாதச ஆராதனம், இரவில் ஸப்தாவரணம் நிகழ்ச்சியும், 7-ந்தேதி காலை ஸ்நபன திருமஞ்சனம், இரவில் புன்னைமர வாகனத்தில் திருவீதியும், 8-ந்தேதி காலை மட்டையடி, இரவில் ஊஞ்சல் உற்சவமும், 9-ந்தேதி காலை மஞ்சள் நீர், இரவில் விடையாற்றி விழாவும் நடக்கிறது.10-ந் தேதி திருத்தேர் 8-ம்திருவிழாவையொட்டி காலை 10 மணிக்கு பெருமாள் திருமஞ்சனம், இரவில் பெருமாள் ஏகாந்தசேவையுடன் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

பங்குனி உத்திர பெருந்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் , இந்து சமய அறநிலையத்துறை அரியலூர் உதவி ஆணையர், கோவில் செயல் அலுவலர் மற்றும் சீர்பாத பணியாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.


Next Story