கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தடை - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கடந்த 7-ம் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், " சனாதனம் என்றால் என்ன' என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக் கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே, கோடநாடு கொலை - கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒளிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்" என தெரிவித்து இருந்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்துக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்தார். அதில் தன்னை பற்றி அவதூறாக பேச உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், உதயநிதி தன்னை பற்றி பேசியதற்கு ரூ 1.10 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரினார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கு இன்று (செப்டம்பர் 21) சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜரானார். உதயநிதி தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை.
உதயநிதி தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசி வருகிறார். எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறு பிரச்சாரம் செய்திட உதயநிதிக்கு தடை விதிக்க வேண்டும். இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமியின் நற்பெயருக்கு பெரும் களங்கம் ஏற்படும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் விஜயநாராயணன் வாதிட்டார்.
இறுதியில், கோடநாடு கொலை, கொள்ள வழக்குகளில் ஈபிஎஸ்-ஐ தொடர்புபடுத்தி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 வாரத்தில் பதிலளிக்கவும் நீதிபதி மஞ்சுளா உத்தரவிட்டார்.