மதுரை அ.தி.மு.க. மாநாட்டில் சேலத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்பு-மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தகவல்
மதுரையில் நடக்கும் அ.தி.மு.க. மாநாட்டில் சேலத்தில் இருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்கிறோம் என்று மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தெரிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. பொன்விழா மாநாடு தொடர்பாக சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் அ.தி.மு.க. பொன்விழா மாநாட்டில் சேலம் மாநகர் மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரம் பேரும், புறநகர் மாவட்டத்தில் இருந்து 40 ஆயிரம் பேரும் என மொத்தம் சுமார் 50 ஆயிரம் பேர் பெருந்திரளாக பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் பேசியதாவது:-
பெருந்திரளாக பங்கேற்க வேண்டும்
மதுரையில் நடைபெற உள்ள வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் சேலம் மாநகர் மாவட்டத்தில் இருந்து பெரும் திரளானோர் கலந்து கொள்ள வேண்டும். இதற்காக 60 வார்டுகளில் இருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வருவதற்கு 30 கார்கள், 30 பஸ்கள், 100 மினி பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மாநகர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள இருக்கிறோம். நாளை மறுநாள் காலை 8 மணிக்கு மாநாடு திடலில் கட்சி கொடியினை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுகிறார். அந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். இந்திய அரசியல் வரலாற்றில் மதுரையில் நடக்கும் அ.தி.மு.க. மாநாடு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சராக ஆவதற்கு அனைவரும் சபதம் ஏற்கும் வகையில் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, பாலு, மாரியப்பன், சண்முகம், பாண்டியன், சரவணன், முருகன், ஜெயபிரகாஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜான்கென்னடி, முன்னாள் கவுன்சிலர் மேகலா பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.