2024-ம் ஆண்டு இறுதியில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடங்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


2024-ம் ஆண்டு இறுதியில் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி தொடங்கும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2024-ம் ஆண்டு இறுதியில் தொடங்கி 2028-ம் ஆண்டு இறுதியில் தான் முடியும் என அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை சைதாப்பேட்டை திவான் பாஷ்யம் தெருவில் உணவு சமைக்கும் கூடத்தில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த 5 பேர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர்.சாந்திமலர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர். அனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை சைதாப்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் செயற்கையாக நடைபெற்ற சம்பவம். இதில் 2 பேருக்கு 2 சதவீதம், 2 பேருக்கு 40 சதவீதம், ஒருவருக்கு 32 சதவீதம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 5 பேரையும் காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள். சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு நேரடியாக வந்து எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டினார். அப்போது, அ.தி.மு.க. அரசு கட்டுமானப் பணிக்கு 200 ஏக்கர் நிலத்தை வழங்கியது. மத்திய அரசு கூடுதலாக 22 ஏக்கர் நிலம் கேட்டார்கள். அந்த நிலமும் வழங்கப்பட்டுவிட்டது.

ஆனால், நாடாளுமன்றத்தில் நிலம் வழங்க தாமதம் ஏற்பட்டதால் தான் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படவில்லை என்று மத்திய மந்திரி கூறியுள்ளது ஏற்கக்கூடியது இல்லை. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை விரைவில் கட்டி முடிக்கவேண்டும் என்று பிரதமரிடம் நேரிலும், கடிதம் மூலமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இதேபோல, கோயம்பத்தூரிலும் புதிய எய்ம்ஸ் ஆஸ்பத்திரியை கட்டவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மதுரையை தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைக்க மத்திய அரசு நிதி வழங்கியது. ஆனால், தமிழகத்துக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் நிதி ஆதாரம் வழங்கும் என்று சொன்னார்கள்.

கடந்த வாரம் நான் ஜப்பான் சென்றபோது ஜைக்கா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டேன். அப்போது, மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கான நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்றோம். கூட்டத்தில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2024-ம் ஆண்டு இறுதியில் தொடங்கி 2028-ம் ஆண்டு இறுதியில் தான் முடியும் என்று கூறியுள்ளார்கள்.

இது தான் உண்மை நிலவரம். ஆஸ்பத்திரி வேலை முடிந்துவிட்டது என்று மத்திய அரசு கூறுவது சரியானது இல்லை. இதேபோல, ஆண்டுக்கு 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். சுற்றுச்சூழலால் ஏற்படும் புற்றுநோய் பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story